கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அமுல் நிறுவனத்திற்கு எதிரான கோஷங்கள் எழுந்துள்ளன. ஒரு மாநிலத்தில் தேர்தல் விவகாரமாக எழுப்பப்பட்ட நிலையில், மற்றொரு மாநிலத்தில் மாநில முதலமைச்சரே மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு பிரச்னை வெடித்துள்ளது. அப்படி, என்னதான் நடந்தது? என்பதை பார்ப்போம்.


கர்நாடகாவில் தேர்தல் விவகாரம் மாறிய அமுல்:


கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பால் பொருள்களை விற்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்ததே அனைத்து பிரச்னைக்கும் தொடக்கப்புள்ளி. கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனமான (மாநில அரசுக்கு சொந்தமான) நந்தினிக்கு போட்டியாக அமுல் நிறுவனம் வருவதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. இது, உள்ளூர் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தல் விவகாரமாக மாறும் நிலைக்கு சர்ச்சை வெடித்தது.


அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்:


அமுல் நிறுவனம், இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்ய தொடங்கியது பிரச்னையாக மாறியது.


தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


தொடர் சர்ச்சையை ஏற்படுத்தும் அமுல்:


மற்ற மாநில அரசுகளுக்கு சொந்தமான பால் நிறுவனங்களுக்கு போட்டியாக மாறும் அளவுக்கு அமுல் எப்படி வளர்ந்தது. அது யாருக்கு சொந்தம் என்பதை பார்ப்போம்.


பலர் நினைப்பது போல, அமுல் நிறுவனம், மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆவின், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் நந்தினியை போல குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்புக்கு சொந்தமானது.


மற்ற மாநில நிறுவனங்களுடன் மோதும் குஜராத் நிறுவனம்:


கிட்டத்தட்ட 76 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அமுல் நிறுவனம், இன்று இந்தியாவின் நம்பர் 1 பால் நிறுவனமாகவும் உலகளவில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் 8ஆவது நிறுவனமாகவும் உள்ளது. குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போல்சன் டெய்ரிக்கு எதிரான கூட்டுறவு இயக்கத்தின் ஒரு பகுதியாக அமுல் உருவாக்கப்பட்டது.


போல்சன் டெய்ரி நிறுவனம், கைரா மாவட்டத்தின் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்து அப்போதைய பம்பாய் அரசாங்கத்திற்கு விற்றது. இந்த வியாபாரத்தால் விவசாயிகள் தவிர அனைவரும் பயனடைந்தனர். உள்ளூர் வர்த்தக நிறுவனமான போல்சன் பின்பற்றிய இந்த சுரண்டல் வர்த்தக நடைமுறைகள் கூட்டுறவு இயக்கத்தின் வழியாக அமுல் உருவாவதற்கு காரணமாக அமைந்தது.


வெண்மை புரட்சி:


சர்தார் வல்லபாய் படேலின் ஆலோசனையின்படி, ஆனந்த் மாவட்ட விவசாயிகள், சொந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கினர். இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவரும் இந்தியாவின் பால் மனிதர் என அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் சிறப்பான வழிகாட்டுதலில் இயங்கி வந்தது அமுல்.


இச்சூழலில், தற்போது, மற்ற மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்கு சொந்தமான பால் நிறுவனங்களுடன் போட்டியிடுவதாக புகார் எழுந்துள்ளது.