அமுலை சுற்றி சர்ச்சை வெடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அமுலின் லஸ்ஸி பாக்கெட்டில் பூஞ்சை இருப்பதால் மாசுபட்டு இருப்பதாக வெளியான வைரல் வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், லஸ்ஸி பாக்கெட் அதன் காலாவதி தேதிக்கு முன்பே பூஞ்சையால் மாசுபட்டு இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.


சர்ச்சை மேல் சர்ச்சை:


வீடியோவில் லஸ்ஸி பாக்கெட் திறக்கப்படுவதும் பச்சை பூஞ்சை அதில் இருப்பது போன்றும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை வெளியிட்டவர், தான் லஸ்ஸியை அருந்தியதாகவும் அதன் சுவை மிக மோசமாக இருந்ததன் காரணமாக அதில் பூஞ்சை இருப்பதை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், லஸ்ஸி பாக்கெட்டில் மாசு இருப்பதாக வெளியான வீடியோ பொய்யானது என அமுல் விளக்கம் அளித்துள்ளது. இந்த வீடியோவை பயன்படுத்தி அமுல் பொருள்களை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமுல் நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அமுல் லஸ்ஸியில் மாசுபாடா..?


அதில், "அமுல் லஸ்ஸியின் தரம் குறைந்ததாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் போலியான செய்தி பரப்பப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். வீடியோவை உருவாக்கியவர், அதில் உண்மை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அவரின் இருப்பிடத்தை வெளியிடப்படவில்லை.


அமுல் விளக்கம்:


அமுல் லஸ்ஸி எங்களின் அதிநவீன பால் பண்ணைகளில் தயாரிக்கப்படுகிறது என்பதையும், தரம் மற்றும் பேக்கேஜிங்கின் கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுகிறது என்பதையும் நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். வழக்கமான நடைமுறையாக, எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக பின்வரும் அறிவிப்பை எங்கள் எல்லா பேக்குகளிலும் குறிப்பிடுகிறோம், "ஓட்டையான பேக்கை
வாங்க வேண்டாம்"


லஸ்ஸி பாக்கெட்டில் ஸ்ட்ரா போடும் இடத்தில் சேதமடைந்ததாகத் தோன்றுகிறது. அதிலிருந்து திரவம் கசிந்து, நிறமாற்றமாகி பூஞ்சை ஏற்பட்டிருக்கலாம். இந்த வீடியோ தவறான தகவலை உருவாக்கவும், தேவையற்ற அச்சத்தையும் கவலையையும் எங்கள் நுகர்வோர் மத்தியில் பரப்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


தயவுசெய்து இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து அமுல் லஸ்ஸியின் நன்மையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆவின் vs அமுல்:


சமீபத்தில், கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அமுல் நிறுவனத்திற்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பால் பொருள்களை விற்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்ததே அனைத்து பிரச்னைக்கும் தொடக்கப்புள்ளி. கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனமான (மாநில அரசுக்கு சொந்தமான) நந்தினிக்கு போட்டியாக அமுல் நிறுவனம் வருவதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.


அதேபோல, தமிழ்நாட்டில், அமுல் நிறுவனம், இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்ய தொடங்கியது பிரச்சினையாக மாறியது.