ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 


53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றிக்கு வழி வகுத்த கோலிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா அணியை புகழ்ந்து தள்ளி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "டி20 உலகக் கோப்பையை சிறப்பாக தொடங்கியுள்ளோம். தீபாவளி தொடங்கியுள்ளது. கோலி, என்ன ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டு மொத்த அணியினருக்கும் வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 






பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியை திரில்லர் போட்டி என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "என்ன ஒரு திரில்லரான ஆட்டம். பயங்கரமான அழுத்தத்திற்கு இடையே பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று. நல்லது. இனி வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


 






டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணிக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியுடன் உலக கோப்பையையும் வெல்வோம்" என பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு சிறப்பான அணிகளுக்கு இடையே ஒரு சிறந்த போட்டி. சிறப்பான முடிவு கிடைத்துள்ளது. கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் தைரியமாக விளையாடி 99 ரன்கள் எடுத்தது.


 






கடைசி 10 ஓவர்களில் இந்தியா சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை விட அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மீண்டும் தான் யார் என்பதை கிங் கோலி நிருபித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.