பாலியல் தொல்லை விவகாரத்தில் 3 மாதங்களாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததை கண்டித்து டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை
ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட பல போட்டித் தொடர்களில் இந்தியா சார்பில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கு அதிகம். அந்த வகையில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான விக்னேஷ் போகத், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திடீரென போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக வினேஷ் போகத் அளித்த பேட்டியில், "பெண் மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். 10-20 வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை குறித்த தகவல்கள் எனக்கு தெரியும். கூட்டமைப்பிற்கு பிடித்த சில பயிற்சியாளர்களும், பெண் பயிற்சியாளர்களிடம் தவறாக நடந்தனர். அதேசமயம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ்பூஷன் சரண் சிங்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மல்யுத்த கூட்டமைப்பு தொந்தரவு செய்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் சென்றபோது, எங்களுக்கு பிசியோதெரபிஸ்ட் கூட இல்லை. இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காக தொடர்ந்து மிரட்டப்பட்டோம்” என சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். எனவே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த நிலையில், விக்னேஷ் போகத்துடன் சுமார் 30 மல்யுத்த வீரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஜ்பூஷன் மறுத்தார். ஒருவேளை அப்படி எதுவும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார் எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரிஜ்பூஷன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்திய விளையாட்டு கழகம், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு வீரர், வீராங்கனைகள் புகார் குறித்து விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில் வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ”3 மாதங்களை கடந்த பின்பும் எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்து கொண்டிருந்தபோது, மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக் மற்றும் வினேஷ் போகத் மனமுடைந்து அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவ்விவகாரத்தில் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், டெல்லி போலீசாருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.