ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழவிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் சாக மாட்டேன் என கூறியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார்.


ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பொதுக் கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது கார்கே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயங்கி விழவிருந்த காங்கிரஸ் தலைவரை மேடையில் இருந்தவர்கள் தாங்கி பிடித்தனர். அவரை நாற்காலியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினர்.


காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியது என்ன?


சிறிது நேரத்திலேயே அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். கார்கேவின் ரத்த அழுத்தத்தில் மாற்றம் இருப்பதாக கூறினர். கொஞ்ச நேரத்திலேயே, மேடையில் மீண்டும் பேச வந்த அவர், "நான் அவ்வளவு சீக்கிரம் சாகப் போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன்" என்றார்.


இந்த நிலையில், இதனை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசும்போது அவரையும் அவரது தலைவர்களையும் அவரது கட்சியையும் விஞ்சும் அளவுக்கு முற்றிலுமாக அருவருப்பாகவும் அவமானகரமாகவும் பேசியுள்ளார்.


அமித் ஷாவின் விமர்சனம்:


வெறுப்பின் உச்சமாக, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் நான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுக்கிறார். பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு வெறுப்பாகவும் பயந்து கொண்டுள்ளனர், அவர்கள் தொடர்ந்து அவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இவை காட்டுகிறது.


 






கார்கேயின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவருக்காக மோடி பிரார்த்தனை செய்கிறார். நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் நீண்ட, ஆரோக்கியமாக வாழ நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும். 2047க்குள் வளர்ந்த பாரதம் உருவாகும் வரை வாழட்டும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.