இந்திய - பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் - இந்தியா:
வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது.
பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து வரும் கருத்து புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக பேசிய ராஜ்நாத் சிங்:
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், "இன்சானியத், ஜமுஹ்ரியாத், காஷ்மீர் ஆகிய மூன்றும் இணைந்தால், காஷ்மீர் மீண்டும் சொர்க்கமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது இந்தியாவின் ஜனநாயகம், அதன் வலிமையின் நிரூபணம். வாக்களிக்காத ஒருவர் கூட எஞ்சியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமரின் அந்த தொகுப்பு இப்போது அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கேட்ட பணத்தை விட இது அதிகம். நண்பர்களை மாற்றலாம். ஆனால், அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று வாஜ்பாய் கூறுவார்.
நல்ல உறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பாகிஸ்தானுக்கு அவர்கள் கேட்டதை விட அதிகமான பணத்தை நாங்கள் கொடுத்திருப்போம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் பாகிஸ்தானின் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மூட வேண்டும் என்று கூறியது. ஆனால், பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை.
இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிடக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். எல்லையின் இந்தப் பக்கம் அல்ல, தேவைப்பட்டால் எல்லையின் மறுபக்கத்திற்கும் சென்று அதைச் செய்வோம்" என்றார்.