ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி சாட்சியமாக நேரில் ஆஜராகும்படி சிபிஐ ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பியது. புல்வாமா தாக்குதல் குறித்து கடந்த வாரம், சத்யபால் மாலிக் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்த நிலையில், சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியிருந்ததது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்தது.


சத்யபால் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பியது ஏன்?


இந்நிலையில், சத்யபால் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பியது ஏன்? என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.


"நடந்ததாகக் கூறப்படும் காப்பீட்டு மோசடி வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மத்திய புலனாய்வு துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. பா.ஜ.க. அரசை எதிர்த்து சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு சுமத்தியதற்கும் சம்மன் அனுப்பியதற்கும் தொடர்பில்லை. மக்களிடம் இருந்து மறைக்க வேண்டிய எந்த ஒரு செயலையும் பாஜக அரசு செய்யவில்லை.


3 முறை சம்மன்:


தனிப்பட்ட, அரசியல் சுயநலத்துக்காக சில கருத்துக்கள் கூறப்பட்டால், அவ்வாறே கருதப்பட வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின்படி, அவருக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. சில புதிய தகவல்கள் அல்லது ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்க வேண்டும்.


மேலும் அவர் மூன்றாவது முறையாக அழைக்கப்பட்டுள்ளார். எங்களுக்கு எதிராக பேசியதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்பதில் உண்மையில்லை" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.


கவர்னராக இருந்த போது அமைதியாக இருந்தது ஏன்?


சத்யபால் மாலிக் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து பேசிய அமித் ஷா, "ஆட்சியில் இருக்கும் போது ஏன் மனசாட்சி விழிக்கவில்லை. இதுபோன்ற கருத்துகளின் நம்பகத்தன்மையை மக்கள், பத்திரிக்கையாளர்கள் பார்க்க வேண்டும். இதெல்லாம் உண்மையென்றால், அவர் கவர்னராக இருந்த போது ஏன் அமைதியாக இருந்தார்?


இவையல்ல. பொது விவாதம். பாஜக தலைமையிலான அரசு மறைக்க வேண்டிய எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நம்மை விட்டு பிரிந்த பிறகு தனிப்பட்ட, அரசியல் சுயலாபத்திற்காக சில கருத்துகள் கூறப்பட்டால், அதை மக்கள், ஊடகங்கள் மதிப்பிட வேண்டும்" என்றார்.


புல்வாமா தாக்குதல்:


கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது. இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணையம் முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தபோதுதான் நடந்தது. 


பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கோவா மாநில ஆளுநராக சத்யபால்மாலிக் மாற்றப்பட்டார். அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை கவனித்து கொள்ளும்படி, பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், சமீபத்தில் அரசியலில் புயலை கிளப்பும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார்.