பாஜகவிற்கு பயம் இல்லை - அமித் ஷா
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித் ஷாவிடம், அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதுகுறித்து தான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனால், அதானி விவகாரம் குறித்து பாஜக பயப்படுவதற்கோ, மறைப்பதற்கோ ஒன்றுமில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு போட்டி இருக்கும் என நான் கருதவில்லை. ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியை முழுமனதோடு ஏற்றுக்கொண்டுள்ளது. கர்நாடகாவில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும்” என அமித் ஷா பதிலளித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு பதில்:
அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் மத்திய அரசு அதானிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் கடும் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலினும் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், முதன்முறையாக அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராகுல் பேச்சு நீக்கப்பட்ட விவகாரம்:
அதானி தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ”நாடாளுமன்றத்தில் ஒருவர் கூறிய கருத்துக்கள் நீக்கப்படுவது முதல் முறை அல்ல. நாடாளுமன்ற சரியான மொழியைப் பயன்படுத்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு விவாதம் நடத்துவதற்கான ஒரு இடம். இதனை ,நாடாளுமன்ற நடவடிக்கைகளின் வரலாறு தெளிவாகக் காட்டுகிறது” என அமித் ஷா பேசினார்.
பெகாசஸ் விவகாரம்:
பெகாசஸ் பிரச்சினை எழுப்பப்பட்டபோது, ஆதாரத்துடன் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் என்று நான் கூறியிருந்தேன், ஆனால் எதிர்க்கட்சியினர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் ஏன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை? சத்தத்தை உருவாக்குவது எப்படி என்று மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை வெற்றிகரமாக தடை செய்தோம். இது நாட்டில் மதவெறியை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு என்று நான் நம்புகிறேன். அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருந்ததாக கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. நாங்கள் வாக்கு வங்கி அரசியலையும் கடந்து சென்று அந்த அமைப்பை தடை செய்தோம்.