Pranab Mukherjee: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதிசடங்கு நடத்த இடம் ஒதுக்கவில்லை என, மத்திய பாஜக அரசை காங்கிரஸ் சாடி வரும் நிலையில் இந்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம்:
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைநகர் ராஜ்காட்டில் உள்ள 'ராஷ்ட்ரிய ஸ்மிருதி' பகுதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை, செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ளார். தனது தந்தைக்கு நினைவிடம் உருவாக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “எனது தந்தைக்காக நினைவிடம் அமைக்கும் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமயிலான அரசுக்கு எனது இதயத்தின் மையத்தில் இருந்து நன்றி. நாங்கள் கேட்காமலே நினைவிடம் அமைக்கும் அரசின் செயல், பிரதமரின் உண்மையான கருணையுள்ள நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.
அரசு கடிதம்:
மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சமாதி அமைப்பதற்காக 'ராஷ்டிரிய ஸ்மிருதி' வளாகத்திற்குள் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒதுக்கப்பட்ட இடத்தை ஒதுக்க தகுதி வாய்ந்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி இந்த இந்த கடிதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மரியாதை நிமித்தமாக பிரணாப்பின் மகள் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31, 2020 அன்று இறந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
மன்மோகன் சிங் நினைவிட குழப்பம்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 26-ம் தேதி காலமானதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் அவரது இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டடது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை அவரது நினைவிடம் கட்டப்படும் இடத்தில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷும் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியதுடன், முன்னாள் பிரதமரின் தகனம் மற்றும் நினைவிடத்திற்கு சரியான இடத்தை அரசாங்கத்தால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். "இது இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமானத்தைத் தவிர வேறில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் அரசுக்கு பாரம்பரியங்களை நினைவூட்டுகிறது, ஆனால் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஒரு நினைவகம் கட்டவில்லை என்று பாஜக சாடியது. இதனால் இரு கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் முற்றி வரும் சூழலில், பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்கும் முடிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.