அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த திங்கள்கிழமை (மார்ச் 11ஆம் தேதி) குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
சி.ஏ.ஏ. என்றால் என்ன?
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், பார்சி இனத்தவர், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க குடியரிமை திருத்த சட்டம் வழிவகுக்கிறது.
ஆறு வகை ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குள் குடியேறி இருக்க வேண்டும்.
அமெரிக்க பரபர கருத்து:
இஸ்லாமியர்களை இந்த சட்டம் வஞ்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க அரசுகள் அறிவித்துள்ளன. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க இது தொடர்பாக பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா தந்த பதிலடி என்ன?
அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இது தேவையற்ற கருத்து என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை வழங்குகிறது. குடியுரிமையை பறிப்பது அல்ல. இது நாடற்றவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது. மனித கண்ணியத்தை நிலைநாட்டுகிறது. மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்தை பொறுத்தவரை, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறான தகவல். தேவையற்ற கருத்து என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் நாட்டின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு பற்றி பெரிதாக அறியாதவர்கள் இதில் கருத்து தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்காமலேயே இருக்கலாம். இந்தியாவின் நட்பு நாடுகள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கையின் நோக்கத்தை வரவேற்க வேண்டும்" என்றார்.
அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சிறுபான்மையினருக்கு உதவுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.