ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அங்குள்ள பல்தால் பாதையில் நிலச்சரிவு காரணமாக அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பாலங்களை இந்திய ராணுவம் மீண்டும் கட்டியுள்ளது. ராணுவ வீரர்கள் ஒரே இரவில் வேலை செய்ததில் இந்தப் பணி துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் மாற்றுப்பாதையில் சிரமப்படாமல் இருக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில், `கடந்த ஜூலை 1 அன்று, பல்தால் பகுதியில் உள்ள இரண்டு பாலங்கள் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சினார் படையினர் பணிக்குத் தேவையான பொருள்களை எடுத்து ஒரே இரவில் இரண்டு பாலங்களையும் கட்டி, பக்தர்கள் மேலும் நான்கு மணி நேரம் பயணிக்காமல் இருக்க உதவியுள்ளனர்’ எனப் பதிவிடப்பட்டுள்ளது. 


கடந்த ஜூன் 30 அன்று தொடங்கிய அமர்நாத் யாத்திரை சிறப்பாக நடைபெறுவதற்காக இந்திய ராணுவத்தின் சினார் படையினர் அப்பகுதியின் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



கிராம நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, சினார் படையினர் ஹெலிகாப்டர், கழுதைகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் முதலான உதவிகளோடு, தாங்களே பணிக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். 






நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகில் சிறிய பாலத்தை ராணுவ அதிகாரிகள் கட்டிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. பல்தால் பாதையின் காளிமாதா பகுதியில் தட்பவெப்பம் அதிகரித்ததன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, இங்கிருந்த இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 


இந்திய ராணுவம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் `ஒரு சாதனையைப் போல, சினார் படையினர் 13 பொறியிலாளர் ரெஜிமெண்ட் ஒரே இரவில் இருளையும், குளிரையும் பொருட்படுத்தாமல் புதிய பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர். இது யாத்திரை சிறப்பாக நடைபெற உதவுவதோடு, பக்தர்களிடம் பாதுகாப்பு உணர்வையும் வழங்குகிறது. இதன்மூலமாக, இந்திய ராணுவம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்றும் என்பதை நிரூபித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது. 


இமாலய மலைகளின் மேல் பகுதியில் சுமார் 3880 மீட்டர் உயரத்தில் குகையில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் செல்லும் புனித பயணம் அமர்நாத் யாத்திரை என அழைக்கப்படுகிறது.