ராம்புராட் பகுதியில் நேர்ந்த கலவரத்தைச் சுட்டிக்காட்டி பேசிய மம்தா பேனர்ஜி, "நான் நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தவில்லை, ஆனால் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும்கூட இதுபோன்ற கலவரங்கள் நடக்கிறது. குற்றவாளிகள் மீது கமடிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் மேற்கு வங்க மாநிலம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் இல்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பாது ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால், படுகாயம் அடைந்த பாது ஷேக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பிர்பூம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன. ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாக பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இதனையறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற நிலையில், சம்பவ இடத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். ஒருபுறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொல்லப்பட்ட பாது ஷேக்கின் ஆதரவாளர்கள் தான் இதைச் செய்தனர் என்ற தகவலும் பரவி வந்தன. இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறிவருகிறது. இச்சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன, ஆனால் அதனை அக்கட்சி மறுத்துள்ளது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மரணங்கள் 'கொடூரமானவை' என்று விவரித்த மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், மாநிலம் கொடூரமான கலாச்சாரத்தின் பிடியில் இருப்பதாகக் கூறினார். விவகாரம் முற்றியுள்ள நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தன்கரைக் கேட்டுக்கொண்டார், மேலும் அவரது கருத்துக்கள் மாநில அரசாங்கத்தை புரட்டிப் போடுவதற்கு மற்ற அரசியல் கட்சிகளை தூண்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "ராம்புராட் கலவரம் எதிர்பாராத ஒன்று. இம்மாநிலத்தில் உள்ள அனைவரும் எங்கள் மக்கள். நாங்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாக்க விரும்பவில்லை. இந்த கலவரம் தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நான் ராம்புராட் பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். மேற்கு வங்கம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் அல்ல. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கலவரம் நடக்கிறது. ராம்புராட் கலவரத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்", என்று கூறினார்.