சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையின் மெஸ்ஸில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருப்பதாக உத்தரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் மனோஜ் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அது வைரலானது. இதற்கிடையே  அவரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்ட நிலையில் அதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.


ஃபிரோசாபாத்தில் இருந்து காஜிபூருக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து கான்ஸ்டபிள் மனோஜ் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி பங்கஜ் பாட்டியா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கான்ஸ்டபிள் மனோஜ் குமாரின் வீடியோ வைரலானது, அந்த வீடியோவில் அவர் ஃபிரோசாபாத் போலீஸ் லைனில் உள்ள ஊழியர்களின் மெஸ்ஸில் வழங்கப்படும் உணவின் தரமற்ற நிலை குறித்து நிறைய பேசியிருந்ததைக் காண முடிந்தது. அவர் தனது தட்டில் பருப்பு மற்றும் ரொட்டியுடன் ரிசர்வ் போலீஸ் லைன்களுக்கு வெளியே வந்து நெடுஞ்சாலையில் நின்றுகொண்டு உணவின் தரம் பற்றிப் பேசியிருப்பார்.இந்தப் புகாரை அடுத்து அவர் செப்டம்பர் 20 அன்று, ஃபிரோசாபாத்தில் இருந்து 600 கிமீ தொலைவில் உள்ள காஜிபூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.


இந்த இடமாற்றத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட அவரது வழக்கறிஞர் அது நிர்வாக அடிப்படையிலான பணியிடமாற்றம் எனக் கூறினாலும் முழுக்க முழுக்க அவரது வீடியோவுக்கு கண்டிப்பு தெரிவிக்கும் வகையில் இது நிகழ்த்தப்பட்டிருப்பதாக கூறினார். 


இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஒற்றை நீதிபதி பெஞ்ச், இந்த விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நான்கு வாரங்களுக்குள் iஇது தொடர்பான முழு விவரத்துடன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மறுபிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு நான்கு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில், மனோஜ் குமார் ஏற்கனவே புதிய இடத்தில் சேர்ந்திருந்தால் ஒழிய, 20.09.2022 தேதியிட்ட அவரின் இடமாற்ற உத்தரவு நடைமுறைக்கு வராது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கை பிப்ரவரி 28 அன்று மேலும் விசாரணைக்கு ஒத்திவைத்தது.