இந்தியாவில் உள்ள சமூக சீர்திருத்தவாதிகளில் பலரது கவனத்தை ஈர்த்தவர் சோனம் வாங்சுக். பொறியாளராக இருந்து கல்வி சீர்திருத்தவாதி மற்றும் சூழலியல் ஆர்வலராக மாறிய அவரது வாழ்க்கை கதையை மையப்படுத்தியே, இந்தியில் அமீர்கான் நடிப்பில் ”3 இடியட்ஸ்” திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து, தமிழில் ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் நண்பன் எனும் பெயரில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்நிலையில், லடாக் பிராந்தியத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் அழிந்து வருவதாக, வெளியான ஆய்வறிக்கையை குறிப்பிட்டு, லடாக்கின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என, சோனம் வாங்சுக் வலியுறுத்தியுள்ளர்.
இந்தியாவிற்கு தண்ணீர் பிரச்னை:
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சோனம் வாங்சுக், ”கவனக்குறைவு தொடர்ந்தால் மற்றும் லடாக்கிற்கு தொழில்துறையிலிருந்து வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டால், இங்குள்ள பனிப்பாறைகள் அழிந்துவிடும். இதனால் இந்தியா மற்றும் அதன் அண்டை பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் பிரச்னைகள் உருவாகும்.
வேகமாக உருகும் பனி:
தற்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், லடாக்கில் தொழில்கள், சுற்றுலா மற்றும் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து லடாக்கையே அழித்து விடும். காஷ்மீர் பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வுகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் லே-லடாக்கில் உள்ள பனிப்பாறைகள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அழியும். காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் மனித நடவடிக்கைகளால் சூழப்பட்ட பனிப்பாறைகள் ஒப்பீட்டளவில் வேகமாக உருகுவதைக் கண்டறிந்துள்ளது.
பிரதமர் மோடிக்கு கோரிக்கை:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா காரணமாக ஏற்படும் புவி வெப்பமடைதல் மட்டுமே இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணமல்ல. உள்ளூர் மாசுபாடு மற்றும் உமிழ்வுகளும் இதற்கு சமமான பொறுப்பு ஆகும். லடாக் போன்ற பகுதிகளில், பனிப்பாறைகள் அப்படியே இருக்க, அப்பகுதிகளில் குறைந்தபட்ச மனித நடவடிக்கைகள் இருக்க வேண்டும். எனவே, லடாக் மற்றும் பிற இமயமலைப் பகுதிகளை "தொழில்துறை சுரண்டலில்" இருந்து பாதுகாப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும். இது மக்களின் வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க உதவும்.
மோடி இதை செய்ய வேண்டும்:
லடாக் மற்றும் பிற இமயமலைப் பகுதிகளுக்கு இந்தத் தொழில்துறைச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் மட்டுமின்றி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்கால தலைமுறைக்காக நான் இயற்கையை பாதுகாக்க நடவடிக்கையை எடுத்தால் தான், இயற்கை எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும். அதோடு, சுற்றுச்சூழலை பாதிக்கும் உணவு மற்றும் ஆடைக் கழிவுகளை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் எனவும், இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சுற்றுச்சூழல் அமைப்பில் தலையிட்டு லடாக்கை பாதுகாக்க பிரதமர் மோடிக்கு, சோனம் வாங்சுக் வலியுறுத்தியுள்ளார்.
5 நாட்கள் உண்ணாவிரதம்:
காலநிலையை பாதுகாக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, குடியரசு தினமான இன்றிலிருந்து 5 நாள் உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் தொடங்கியுள்ளார். ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் லடாக் பகுதியில், கடும் உறைபனிக்கு மத்தியில் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானர் உண்ணாவிரதம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். அதேநேரம், சோனம் வாங்சுக் வலியுறுத்தலுக்கு அரசு தரப்பில் இருந்து, இதுவரை எந்தவித பதிலும் வெளியாகவில்லை.