மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர். மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.


அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. 


மகாராஷ்டிர அரசியலில் தொடர் திருப்பம்:


இதற்கிடையே, துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே அடுத்த மாதம் நீக்கப்பட்டு, அந்த பதவி அஜித் பவாருக்கு வழங்கப்படும் என மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், பிருத்விராஜ் சவான் கூறிய அனைத்து கருத்துக்களையும் துணை முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே இதுகுறித்து பதில் அளித்த அவர், "மகாராஷ்டிராவின் முதலமைச்சராக அஜித் பவார் ஆக மாட்டார் என்பதை (மகா கூட்டணி)யில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் தலைவராக நான் அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன்.


முதலமைச்சராகிறாரா அஜித் பவார்?


மகா கூட்டணியின் கூட்டங்கள் நடந்தபோது (ஜூலை 2ஆம் தேதி என்சிபி கட்சி அரசில் சேர்வதற்கு முன்) அஜித் பவாருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காது என்று அவரிடம் தெளிவாக கூறப்பட்டது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அவர் (அஜித்) அதற்கு ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், முதலமைச்சரை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக நீடிப்பார். அதில், எந்த மாற்றமும் இல்லை" என்றார்.


பிருத்விராஜ் சவானை சாடிய தேவேந்திர பட்னாவிஸ், "'மகா கூட்டணி குறித்து மக்களை குழப்புவதை நிறுத்த வேண்டும். தலைவர்கள் குழம்பவில்லை. ஆனால் கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். பிருத்விராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் ஏதாவது நடக்குமானால், அது மாநில அமைச்சரவை விரிவாக்கமாக இருக்கும். அதற்கு முதலமைச்சர் அழைப்பு விடுப்பார்" என்றார்.


அமைச்சர்களாக பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு சமீபத்தில்தான் அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டது. பல முக்கியமான அமைச்சகங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.


மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகம் அளிக்கப்பட்டது. தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயமும் வால்ஸ் பாட்டீலுக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டது. சாகன் புஜ்பலுக்கு உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அளிக்கப்பட்டது.