மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் திருப்பம்:


தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவார், கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சரத் பவாரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் அளவுக்கு பிரச்னை வெடித்தது.


இந்த நிலையில், அஜித் பவார், பிரபுல் படேல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள், சரத் பவாரை சந்தித்து இன்று பேசியுள்ளனர். சந்திப்பின் போது பேசியது என்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த பிரபுல் படேல், "இன்று நாங்கள் எங்கள் கடவுளையும், நமது தலைவரான சரத் பவாரையும் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினோம்.


சரத் பவாரை சந்தித்த அஜித் பவார்:


அப்பாயின்ட்மென்ட் எதுவும் கேட்காமல் இங்கு வந்தோம். கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சரத் பவார் இங்கு வந்துள்ளார் என்பது குறித்து தெரிய வந்தது. அதனால்தான் நாங்கள் அனைவரும் அவரது ஆசிர்வாதத்தைப் பெற இங்கு வந்தோம். சரத் பவாரை, நாங்கள் அனைவரும் மிகவும் மதிக்கிறோம். ஆனால், கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். அவர் கூட இதைப் பற்றி சரியாக சிந்தித்து எதிர்காலத்தில் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். சரத் ​​பவார் எங்களுக்குப் பதில் சொல்லாமல், நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரைச் சந்தித்த பிறகு நாங்கள் திரும்பிச் செல்கிறோம்" என்றார்.


அஜித் பவார், தனது இல்லமான தேவகிரி பங்களாவில் தனக்கு விசுவாசமான என்சிபி தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, சரத் பவாரை சந்திக்க ஒய்.பி. சவான் மையத்திற்கு சென்றார். இந்த கூட்டத்திற்கு, சரத் பவார் அணியில் உள்ள ஜெயந்த் பாட்டீலையும் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே அழைத்திருந்தார்.


கூட்டத்தில் நடந்தது என்ன?


பிரபுல் படேல், சுனில் தட்கரே உள்ளிட்ட 9 அமைச்சர்களும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சரத் ​​பவார், சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திர அவாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். அஜித் பவார் தலைமையிலான அணி, பாஜக அரசாங்கத்தில் இணைந்த பிறகு, சரத் பவாரை முதல்முறையாக சந்தித்து பேசியுள்ளனர்.


இரண்டு நாள்களுக்கு முன்புதான், சரத் பவாரின் மனைவி பிரதிபா பவாரை சந்திக்க சரத் பவாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சில்வர் ஓக்கிற்கு அஜித் பவார் சென்றிருந்தார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் பிரதிபா பவாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிரதிபா பவாரை சந்திக்க சரத் பவாரின் வீட்டுக்கு அஜித் பவார் சென்றிருந்தார்.