"என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார்" என்று அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்கு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பினார்கள்.


ஆனால், அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இது குறித்து விளக்கமளித்துள்ள அஜய் மிஸ்ரா, என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார் என்று கூறியுள்ளார்.


கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று, உத்தரப்பிரதேசம் கேரியில் ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் அஜய்மிஸ்ரா, துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதனால் அங்கு வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். அப்போது அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்ததாகக் கூறப்படும் கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர், பாஜகவினர் மூவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்றார். ஆனால் அவரை உபி போலீஸார் தடுத்து நிறுத்தினர். வாரண்ட் ஏதும் இல்லாமலேயே பிரியங்கா காந்தி 36 மணி நேரத்துக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரும், அவரது சகோதரர் ராகுல் காந்தியும் இணைந்து லக்கிம்பூருக்குச் சென்று உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையில், உத்திரப்பிரதேச வழக்கறிஞர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி உச்சநீதிமன்றம் லக்கிம்பூர் வழக்கு விசாரணையை ஏற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணன் தலைமையிலான அமர்வு, உத்திரப்பிரதேச சம்பவத்தில் கைது நடவடிக்கை என்ன உள்ளிட்ட விசாரணை அறிக்கையை கோரியது.


இந்நிலையில்தான் மாநில அரசு இருவரை கைது செய்தது. 8 பேர் கொண்ட காவல்படையை அமைத்தது. அத்துடன் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜராகவில்லை. மாறாக அவரது தந்தை மகனுக்கு லீவ் லெட்டர் போல் விளக்கமளித்துள்ளார். உத்தரப்பிரதேச வன்முறை தொடர்பாக இதுவரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எதுவும் தெரிவிக்கவில்லை. அஜய் மிஸ்ரா மட்டும் ஒருமுறை அமித்ஷாவை சந்தித்து வந்தார். உபி அரசு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.