Fine for Air India: பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பணியை செய்யத் தவறியதற்காக விமானத்தின் பைலட் - இன் கமாண்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், விமானத்தை இயக்கிய விமானி, விமான குழுவினர் நான்கு பேருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டும், விளக்கம் கேட்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான காம்ப்பெல் வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், மிஸ்ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நடந்து வரும் விசாரணை முடிவடைந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்" என்றார்.
இந்த சம்பவம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால், ஒரு வாரமாக குற்றம்சாட்டப்பட்ட மிஸ்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
பாதிக்கப்பட்ட மூதாட்டி, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதிய பிறகுதான், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பவ தினத்தன்று, சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என அந்த மூதாட்டி விமான குழுவிடம் கூறியுள்ளார். எனவே, அவருக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவரது இருக்கைக்குத் திரும்பும்படி மூதாட்டியிடம் விமான பணியாளர்கள் கூறியுள்ளனர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்திருக்கின்றனர்.
அதே இருக்கையில் அமர்வதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே, அவருக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் அங்கேயே அவர் படுத்து உறங்கி இருக்கிறார். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் அவருக்கு மாற்று இருக்கை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், "இந்த அனுபவங்கள் எங்களுக்கு வலியை தருகிறது. இந்த விவகாரத்தை சிறப்பாக கையாண்டு இருக்கலாம். எதிர்காலத்தில், இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாதவாறு தடுக்க விமான பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான திட்டம் தொடங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது.