கடனில் சிக்கி தவித்து வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து ரூ. 18,000 கோடி ரூபாய்க்கு கடந்தாண்டு தொடக்கத்தில் டாடா குழுமம் வாங்கியது. இதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.


டாடாவின் மெகா பிளான்:


இதற்கிடையில், டாடா குழுமம் விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை 49% பங்குகளை வைத்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏற்கெனவே நடத்தி வருகிறது. விஸ்தாராவின் 51 சதவீத பங்குகளை டாடா வைத்துள்ள நிலையில் மீதமுள்ள 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்துள்ளது. 


இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த அதனை விஸ்தாரா உடன் இணைக்க டாடா குழுமம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்குள் விஸ்தாரா நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் இணைக்கப்படும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


இந்த இணைப்பின் மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சா்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏா் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் தெரிவித்திருந்தது.


500 விமானங்களை வாங்க திட்டம்:


இந்நிலையில், 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள சுமார் 500 விமானங்களை வாங்க ஏர் இந்தியா மிக பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. எந்த ஒரு விமான நிறுவனமும் இந்த அளவுக்கு மிக பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டதில்லை. 


ஆனால், ஏர் இந்தியாவின் புதிய உரிமையாளரான டாடா நிறுவனம் விமான நிறுவனத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தொழில்நிறுவன வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனம், அதன் போட்டி நிறுவனமான போயிங் ஆகியவற்றுடன் சரிசமமான அளவில் ஏர் இந்தியா ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து, இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


ஏர் இந்தியா நிறுவனம் 250 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில், 210 சிங்கிள் அயல் A320neos விமானங்களும் 40 வைட்பாடி A350s விமானங்களும் அடங்கும். அதேபோல, போயிங் நிறுவனத்திடம் இருந்து 190 (737 மேக்ஸ் நாரோபாடி வகை ஜெட்) விமானங்களும் 20 (787 வைட்பாடி) விமானங்களும் 10 (777Xs) விமானங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஏர்பஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், போயிங் விமான நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஜனவரி 27 அன்று கையெழுத்திடப்படுகிறது. கடந்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்றுதான், மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா வாங்கியது.


இதுகுறித்து ஏர்பஸ் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.