அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அதன் பிறகு, ஏடிசி செய்த அழைப்புகளுக்கு விமானத்தால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விடுத்த ‘மேடே‘ அழைப்பு

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று பிற்பகல் 1.17 மணியளவில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளானது.

விமானம் விழுந்ததும் பெரும் நெருப்புடன் வெடித்து, வானுயர கரும்புகை எழுந்தது. இந்த விபத்தில் காயடைந்த பலரை மீட்ட மீட்புப் படையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயங்கர விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு(ATC) ‘மேடே‘(MAYDAY) அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏடிசி உடனடியாக விமானத்தை தொடர்புகொள்ள முயன்றுள்ளது. ஆனால், அதன் பிறகு ஏடிசி விடுத்த அழைப்புகளுக்கு விமானத்தால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

‘மேடே‘ என்றால் என்ன.?

பொதுவாக, விமான பயணத்தில், ‘மேடே‘ அதாவது 'Mayday' என்பது, விமானத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் அவசரகால சூழ்நிலையை அறிவிக்க, விமானிகள் பயன்படுத்தும் சர்வதேச அளவிலான அங்கீகரிக்கப்பட்ட துயர சமிக்ஞை ஆகும்.

வாய்மோழியாக விடுக்கப்படும் இந்த துயர அழைப்பின் போது, பெரும்பாலும் 3 முறை, அதாவது “மேடே, மேடே, மேடே“ என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இது, வானொலியில் கேட்கப்படுவதையும், புரிந்துகொள்வதையும் உறுதி செய்யும்.

உயிருக்கு ஆபத்தான அவசரநிலை குறித்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் பிற விமானங்களுக்கும் இந்த ‘மேடே‘ அழைப்பு எச்சரிக்கிறது.  மேலும், இந்த ‘மேடே‘ அழைப்பு என்பது உலகளாவிய துயர சமிக்ஞையாக, விமான போக்குவரத்து மற்றும் கடல்சார் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.

விமானம் தீப்பிடிக்கும்போதோ, மூழ்கும்போதோ அல்லது பிற கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் சூழ்நிலைகள் ஏற்படும் போது, விமானிகள் ‘மேடே‘ என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் ஆரம்ப தகவல் தொடர்பு மற்றும் அடுத்தடுத்த தகவல் பரிமாற்றங்கள் ‘மேடே‘ என்ற சின்கலுடன் தொடங்கப்பட வேண்டும். ‘மேடே‘ என்ற ஒலி பயன்பாட்டில் உள்ள அதிர்வெண்ணில், ரேடியோ அமைதி நிலவுகிறது. ஏனென்றால், இது விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பிற விமானங்களின் உடனடி கவனம் தேவைப்படும் ஒரு முக்கியமான அவசர நிலையை குறிக்கிறது.

பல நாடுகளில், ‘மேடே‘ சமிக்ஞையை தவறாக அனுப்புவது குடுமையான குற்றமாக கருதப்படுகிறது. மேலும், அதற்கு  பொறுப்பான தரப்பினர் சட்டப்பூர்வ தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த சூழ்நிலைகளில் ‘மேடே‘ அழைப்பு விடுக்கப்படும்

ஒரு விமானத்தில் எத்தகைய சூழ்நிலைகளில் மேடே அழைப்பு விடுக்கப்படும் என்பது தெரியுமா.? கீழ்காணும் சூழ்நிலைகளில் விமானத்தின் விமானிகள் இந்த மேடே அழைப்பை விடுப்பார்கள்..

  • விமானத்தின் எஞ்சின் பழுதாகும் போது மேடே அழைப்பு விடுக்கப்படும்.
  • விமானம், விமானத்தின் கேபினில் தீ விபத்து ஏற்படும் போது..
  • உயரம் அல்லது கட்டுப்பாட்டில் விரைவான இழப்பு ஏற்படும் போது..
  • விமானத்தில் எரிபொருள் தீரும் போது..
  • மருத்துவ அவசரநிலைகளின் போது..
  • பறவை தாக்குதல் அல்லது விமானத்தில் கட்டமைப்பு சேதங்கள் ஏற்படும் போது..
  • பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கும் போது..

இப்படிப்பட்ட சூழல்களில், விமானத்தை இயக்கும் விமானிகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே‘ அழைப்பை விடுப்பார்கள்.

'Mayday' போல் 'PAN PAN' அழைப்பு என்றால் என்ன.?

இதேபோல், விமானத் துறையில் பயன்படுத்தப்படும் மற்றொரு அழைப்பு ‘பான் பான்‘ என்பதாகும். இந்த அழைப்பு என்பது, உயிருக்கு ஆபத்து விளைவிக்காத அவசர நிலைகளை தெரிவிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

விமானம் தொலைந்துபோவது, விமானத்தில் உள்ள அமைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்படும் போது, மாற்று வழியில் விமானத்தை இயக்க வேண்டிய தேவை அல்லது உயரத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் போன்ற சமயங்களில், இந்த ‘PAN PAN' அழைப்பை, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தின் விமானிகள் விடுப்பார்கள்.