டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 6 அன்று, மதியம் 2 மணிக்குப் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்றின் பிசினஸ் கிளாஸ் பிரிவில் எறும்புகள் அதிகளவில் இருந்ததற்காக சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாகப் புறப்பட்டது.
எறும்புகள் தொல்லை காரணமாக, AI-111 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த விமானம் மாலை 5.20 மணிக்குக் கிளம்பியது. விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிசினஸ் கிளாஸ் பிரிவில் எறும்புகளின் தொல்லை குறித்து புகார் எழுந்ததால், ஏர் இந்தியா நிறுவனம் வேறொரு Boeing 787-8.விமானத்தை மாற்று ஏற்பாடாக அளித்தது.
இந்த விமானத்தில் இருந்த பயணிகளுள் விஐபி பயணிகளும் இருந்தனர். அவர்களுள் முக்கியமானவராக பூட்டான் நாட்டின் இளவரசர் ஜிக்மே நம்க்யெல் வாங்சக் இருந்தார். அவர் பூட்டான் நாட்டின் தற்போதைய மன்னரான ஜிக்மே கேசார் நம்க்யெல் வாங்க்சக்கின் மகனும், பூட்டானின் அடுத்த அரசரும் ஆவார்.
பிற உயிரினங்களின் தொல்லை காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் பணிகளை நிறுத்தியது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம், AI-105 DEL-EWR என்று பெயரிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகர விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. வானில் பறந்த 30 நிமிடங்களில் இந்த விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. பிசினஸ் கிளாஸ் பிரிவில் வௌவால் ஒன்று தென்பட்டதால், இந்த விமானம் நிறுத்தம் செய்யப்பட்டது.
வனத்துறைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு வௌவாலைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எனினும் வௌவாலைப் பிடிக்க முடியாததால், பயணிகள் அனைவரும் இறங்கச் செய்யப்பட்டு, விமானத்திற்குள் புகை போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இறந்த வௌவாலின் உடல் பிசினஸ் கிளாஸ் பிரிவில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் வேறொரு ஏர் இந்தியா விமானத்திற்கு மாற்றப்பட்டு, இந்த விமானம் நெவார்க் நகரத்திற்குத் தாமதமாகச் சென்றடைந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், கேரளா மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மாம் நகரத்திற்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டவுடன், முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் மீண்டும் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வானில் பறந்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு, விமானம் மீண்டும் தரையிறங்கியது. எனினும், அது சரக்கு விமானம் என்பதாலும், பயணிகள் யாருமின்றி விமானப் பணியாளர்கள் மட்டுமே இருந்ததால், இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்படவில்லை.
இதற்கு முன், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாரணாசியில் இருந்து டெஹ்ராடூன் கிளம்பிய பயணிகள் எலி ஒன்றை விமானத்தில் கண்டதால், விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் மாற்று விமானங்களில் டெஹ்ராடூன் அனுப்பப்பட்டனர். இதே போல், 2019ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் கிளம்பிய விமானம் எலித்தொல்லை காரணமாக சுமார் 12 மணி நேரங்கள் தாமதமாகப் புறப்பட்டது.