பெங்களூருவில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில், கடைசி நேரத்தில் எரிபொருள் ஸ்விட்ச் கோளாறு கண்டறியப்பட்டதால், அகமதாபாத்தில் நிகழ்ந்தது போன்ற பெரிய கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இதே ட்ரீம்லைனர் விமானம், இதே பிரச்னையால் விபத்துக்குள்ளான நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பான நிமிடங்கள்
நேற்று மாலை, லண்டனிலிருந்து பெங்ளூரு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் தரைறயிறங்கியுள்ளது. பின்னர், சிறிது நேரம் கழித்து அடுத்த பயணத்திற்காக புறப்படத் தயாராகியுள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக, விமானத்தின் எரிபொருள் சுவிட்ச் தானாகவே 'Run' நிலையிலிருந்து 'Cutoff' நிலைக்கு மாறியுள்ளது. அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், விமானத்தின் எஞ்சினுக்கு எரிபொருள் செல்வது தடைபடும் அபாயம் இருந்தது.
பதறிய விமானி
நல்லவேளையாக, விமானத்தின் எஞ்சினை ஸ்டார்ட் செய்தபோது, விமானி ஒருவர் இந்த கோளாறை கண்டறிந்தவுடன் பதற்றமடைந்து பின்னர் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் முழுமையான ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் உள்ள 2 எரிபொருள் ஸ்விட்சுகளில், இடது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் இரண்டு முறை 'ரன்' நிலையில் இருக்கத் தவறியதாலும், எஞ்சின் ஸ்டார்ட்அப்பின் போது 'கட்ஆஃப்' நிலைக்கு நகர்ந்ததாலும், விமானம் தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்திற்கு காரணமான அதே கோளாறு
கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்கு அருகே இருந்த விடுதி ஒன்றின் மீது மோதி, வெடித்துச் சிதறியது. அந்த கோர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்து ஏற்பட்டதற்கும் இந்த எரிபொருள் சுவிட்ச் கோளாறுதான் முக்கிய காரணமாக இருந்தது, விபத்திற்கு பிறகு கருப்புப் பெட்டியின் மூலம் கண்டறியப்பட்டது. அதில், விமானிகள் கடைசி நிமிடத்தில் பேசியது பதிவாகியிருந்தது. விமானம் கிளம்பிய உடன், ஒரு விமானி, எரிபொருள் சுவிட்ச்சை ஏன் ஆஃப் செய்தீர்கள் என்று மற்றொரு விமானியிடம் கேட்பதும், அதற்கு, நான் அப்படி செய்யவில்லை என்று அந்த விமானி கூறுவதும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், அகமதாபாத் விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும், போயிங் நிறுவனத்தினரை வைத்தே பரிசோதனை செய்திருந்தது. அவர்களும், அனைத்து விமானங்களின் சுவிட்சுகளையும் பரிசோதனை செய்துவிட்டு, எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்திருந்தனர். ஆனாலும், மீண்டும் அதே கோளாறு மற்றொரு ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் புறப்பட இருந்த நேரத்தில், விமானி கோளாறை கண்டுபிடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக பணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். அப்படி இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.!
