ரயில் புறப்படும் நேரத்தை தாமதிப்பதற்காக இந்திய விமான படை அதிகாரி பொய்யாக வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். பொய்யான வெடுகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லவிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த அதிகாரி செல்லவிருந்தார்.
ஆனால், தன்னுடைய இடத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அவர் தாமதமாக சென்றதால் ரயில் புறப்படும் நேரத்தை தாமதிப்பதற்காக அவர் பொய்யாக வெடிகுண்டு விடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. சனிக்கிழமை மாலை 4:48 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறைக்கு ரயில் கட்டுப்பாட்டு அறை தகவல் கொடுத்தது.
டெல்லியில் இருந்து மும்பைக்கு மாலை 4:55 மணிக்கு ரயில் புறப்படவிருந்தது. ரயில்வேயின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என தெரிய வந்தது.
இதுகுறித்து ரயில்வே துணை காவல்துறை ஆணையர் ஹரீஷ் எச்.பி கூறுகையில், "வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மொபைல் எண் கண்காணிக்கப்பட்டது. அதில், இந்திய விமானப்படை அதிகாரி சுனில் சங்வான் (35) அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சங்வான் மும்பையில் உள்ள சான்டாக்ரூஸில் உள்ள விமானப்படை நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட இடத்திற்குச் செல்வதற்காக ரயிலில் ஏறத் திட்டமிட்டிருந்தார். அவர் தாமதமாக வந்ததால், டெல்லியில் இருந்து ரயில் புறப்படுவதை தாமதப்படுத்த அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
கோச் B-9 இருக்கை எண்-1ல் இருந்தவர் வெடுகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்திய விமானப்படை அடையாள அட்டை மூலம் அவரது அடையாளம் நிறுவப்பட்டது.
PCR அழைப்பை மேற்கொள்ள அவர் பயன்படுத்திய கைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது" என்றார்.
இந்திய தண்டனை சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
தாமதமாக கிளம்பிவிட்டு ரயிலின் புறப்படும் நேரத்தை தாமதிப்பதற்காக இந்திய விமான படை அதிகாரி பொய்யான வெடுகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.