இந்திய விமான படைக்கு சொந்தமான 3 விமானங்கள் இன்று ( சனி கிழமை ) காலை தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
3 விமானங்கள் விபத்து:
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக ஆகிய 2 விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமான தளத்தில் இருந்து 2 விமானங்களும் ஒத்திகைக்காக புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்றும் விழுந்து விபத்துள்ளானது.
விபத்துக்குள்ளான இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர் என்றும் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை:
நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதா என்பதை உறுதிப்படுத்த விமானப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுகோய்-30 விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானியும் இருந்ததாகவும், அதில் 2 விமானிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர்:
இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து, விமானப்படைத் தளபதியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் உத்தரவு:
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானதில், மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானப்படைக்கு உதவுமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ட்வீட் செய்துள்ளார்.