தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமர்க்காவும் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டியும் அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்கள்.
புதிய சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்எல்ஏக்கள்:
அமைச்சர்களை தொடர்ந்து எம்எல்ஏக்களின் பதவியேற்பு நடைபெற உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இடைக்கால சபாநாயகரான ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகரே, புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நபரின் (அக்பருதீன் ஓவைசியிடம்) முன்பு பதவி ஏற்கனுமா? என பாஜக எம்எல்ஏ ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ மெசேஜில், "அவர் உயிருடன் இருக்கும் வரை சத்தியப்பிரமாணம் செய்ய மாட்டேன். முழு நேர சபாநாயகரை நியமித்த பின்னரே பதவி பிரமாணம் எடுத்து கொள்வேன். கடந்த காலங்களில் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவர் (அக்பருதீன் ஓவைசி) முன் நான் சத்தியப்பிரமாணம் எடுத்து கொள்ள வேண்டுமா?" என்றார்.
இடைக்கால சபாநாயகராக ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு:
இது தொடர்பாக பேசிய தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, "இடைக்கால சபாநாயகராக மூத்த எம்எல்ஏவை நியமிக்கும் மரபுக்கு எதிரானது என்பதால், ஓவைசியின் நியமனத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகர் முன்பு பதவியேற்பதை பாஜக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கள்ளனர். சபாநாயகர் நியமிக்கப்பட்ட பிறகு எங்கள் எம்எல்ஏக்கள் பதவியேற்பார்கள். அத்தகைய கட்சியுடன் (ஏஐஎம்ஐஎம்) நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்" என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அப்போது, பாஜக சார்பில் வெற்றி பெற்ற ராஜா சிங்கும், இடைக்கால சபாநாயகர் முன்பு பதவியேற்று கொள்வதை புறக்கணித்தார். அந்த சமயமும், இடைக்கால சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டார். இப்போது, நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை கைப்பற்றியது.
வழக்கமாக மூத்த சட்டப்பேரவை உறுப்பினரே இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவார்கள். ஆறாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக அக்பருதீன் ஓவைசி தேர்வாகியுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்திலும் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.