ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி அதிமுக எடப்பாடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. 


மேலும் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முறையீடு செய்துள்ளனர், இடைத்தேர்தல்  குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


2021 சட்டப்பேரவை தேர்தலில்ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில்  இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ( ஜனவரி.22 ), மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதிமுக கூட்டணி சார்பாக, எந்த கட்சி போட்டியிடும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதிமுக கட்சியானது ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இருவரும் தனி தனியாக போட்டியிட்டால் பிரச்சனை மேலும் வலுக்கும். இருவரும் தனித்தனியாக போட்டியிட்டால் அதிமுக இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்ற நிலையில், இரட்டை இலையை தன் வசம் தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இரட்டை இலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களின் விருப்பமனு ஜனவரி 23ஆம் தேதி முதல் நேற்று மாலை வரை பெறப்படும் என இடைக்கால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுவிருப்பமனு பெறப்பட்ட நிலையில் இன்று எடப்பாடி தரப்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.