இந்திய ரயில்வேயின் பல தசாப்த கால பழைய முன்பதிவு முறையில் பெரும் புரட்சி ஏற்படப் போகிறது. இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) டிக்கெட் உறுதியாகுமா? இல்லையா? என்ற கவலை பயணிகளுக்குத் தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், டிக்கெட் முன்பதிவு முறையை மாற்றியமைக்க ரயில்வே அமைச்சகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Continues below advertisement

பழைய முறைக்கு விடை: ஆகஸ்ட் முதல் புதிய மாற்றம்

இந்திய ரயில்வேயில் தற்போது பயன்பாட்டில் உள்ள முன்பதிவு முறையானது கடந்த 1986-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான இந்த முறையை மாற்றி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய புதிய அமைப்பை உருவாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதிகப்படியான முன்பதிவு கோரிக்கைகளை மிக வேகமாக கையாளும் வகையில் இந்த புதிய சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

94 சதவீத துல்லியமான கணிப்பு

புதிய முறையின் மிகப்பெரிய சிறப்பம்சமே, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதியாகுமா என்பதை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணிப்பதுதான். இதற்கு முன்னதாக, பயணிகள் தங்களின் முந்தைய கால அனுபவங்களை வைத்து மட்டுமே யூகித்து வந்தனர். பழைய முறையில் டிக்கெட் உறுதியாவதை கணிக்கும் துல்லியம் வெறும் 53 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள ஏஐ மாடல்கள் மூலம் இந்த துல்லியம் 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யும்போதே தங்களின் டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எவ்வளவு என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

Continues below advertisement

ஏஐ தொழில்நுட்பம் செயல்படும் விதம்

இந்த அதிநவீன ஏஐ தொழில்நுட்பம், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, முந்தைய கால முன்பதிவு தரவுகள் மற்றும் குறிப்பிட்ட வழித்தடங்களில் நிலவும் பயணிகளின் தேவை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யும். இந்தியாவில் தற்போது 88 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஏஐ ஒருங்கிணைப்பு பயணத் திட்டமிடலை மேலும் எளிதாக்கும். இந்த மாற்றத்தின் போது பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரயில்ஒன் (RailOne) செயலியின் முக்கியத்துவம்

இந்த நவீன வசதிகளை பயணிகளிடம் கொண்டு சேர்ப்பதில் 'ரயில்ஒன்' செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்கனவே 3.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ள இந்த செயலி, தினசரி லட்சக்கணக்கான முன்பதிவுகளை கையாள்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ரயிலின் தற்போதைய நிலை, பிளாட்பார எண்கள், கோச் இருக்கும் இடம் போன்ற தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மேலும், ரயில் மதாத் (Rail Madad) சேவை மற்றும் இருக்கைக்கே உணவு வழங்கும் சேவைகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தினாலும், சாமானிய மக்களுக்கான ரயில் கட்டணத்தை இந்திய ரயில்வே தொடர்ந்து மலிவாகவே வைத்திருக்கிறது. 2024-25 நிதியாண்டில் மட்டும் ரயில்வே துறை 60,239 கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் பயணிகள் உண்மையான பயணச் செலவில் சுமார் 43 சதவீதத்தைக் குறைவாகவே செலுத்துகின்றனர். இந்த புதிய ஏஐ மாற்றமானது, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பயணிகளின் பயணத்தை முன்பை விட அதிக நம்பிக்கைக்குரியதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.