அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விமானம் மோதியதில் மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 33 பேர் உயிரிழந்ததால் மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால் ஒட்டுமொத்த நாடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில், இந்த சோகத்தில் பரபரப்பு ஒன்றும் தற்போது சேர்ந்துள்ளது.
மாயமான இயக்குனர்:
அதாவது, நரோதாவில் வசிப்பவர் மகேஷ் கலாவாடியா. குஜராத்தி மொழியில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இசை ஆல்பங்களையும் இயக்கியுள்ளார். மகேஷ் ஜிர்வாலா என்ற பெயரால் அறியப்படுகிறார். அந்த மாநிலத்தில் இவர் பிரபலமான ஒருவராக உள்ளார். இந்த நிலையில், விபத்து நடந்த நாளில் இவர் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு பகுதிக்கு வேலை காரணமாக சென்றுள்ளார்.
மதியம் 1.14 மணிக்கு அவரது மனைவி ஹீத்தலுக்கு அழைப்பு விடுத்து வேலை முடிந்துவிட்டதாகவும், வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, நீண்ட நேரமாகியும் அவருக்கு அழைப்பு விடுத்தும் அவரது போன் சுவிட்ச் ஆஃப் என்றே வந்துள்ளது.
திடீரென மாயம்:
இதையடுத்து, காவல்துறையினரிடம் மகேஷ் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவரது செல்போன் சிக்னல் கடைசியாக விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது. மேலும், விமான விபத்து 1.39 மணிக்கு நடந்துள்ள நிலையில், 1.40 மணி முதலே மகேஷின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளதாக காட்டப்படுகிறது.
இதனால், இந்த விமான விபத்து மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதியதில் உயிரிழந்ததில் இவரும் உயிரிழந்திருக்கலாமா? அல்லது விமான விபத்தில் வேறு ஏதேனும் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாமா? என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதேசமயம், இவர் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பிய நிலையில் ஸ்கூட்டரும் மாயமாகியுள்ளது.
இதனால், அவரை யாரும் கடத்தியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். ஸ்கூட்டர் எங்கே? ஒருவேளை அவர் கடத்தப்பட்டால் எப்படி விமானம் விபத்தான நேரத்தில் கடத்தப்பட்டிருப்பார்? என்ற பல கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்ஏ மாதிரி பரிசோதனை:
இந்த நிலையில், மகேஷின் குடும்பத்தினர் ஒருவேளை மகேஷ் விபத்தில் உயிரிழந்திருந்தால், அவரது உடலை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சோகத்தின் நடுவே புதிய சோகமாக இயக்குனர் மகேஷ் மாயமாகியது அமைந்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 40 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனென்றால், 241 பயணிகளின் உடல்களும் கருகி தீக்கிரையாகியுள்ளது. விமானம் வெடித்து சிதறிய நேரத்தில் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பம் அப்போது வெளிப்பட்டது. இதனால், மொத்த விமானமும் தீக்கிரையாகியதால் உடல்களை அடையாளம் காண்பதில் மிகப்பெரிய சிக்கல்களும் சவால்களும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தி உடல்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.