5 State Election: 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
5 மாநில சட்டமன்ற தேர்தல்:
சத்தீஷ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடப்பாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 17ம் தேதி முடிவடைய, மற்ற மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைய உள்ளது. இதில் தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சி செய்கிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையம் ஆலோசனை:
இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. அதில், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் 5 மாநிலங்களுக்குமான தேர்தல் தேதிகள், அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, குறிப்பிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் சார்பிலான ஆய்வுப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் தீவிரம்:
வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வழக்கம்போல் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த 5 மாநில தேர்தலில் தென்னிந்தியாவை சேர்ந்த தெலங்கானாவும் இருப்பது தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலம் உருவான பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தான் முதலமைச்சராக இருக்கிறார். அவரது ஆட்சியின் மீது பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் தெலங்கானாவில் அடிக்கடி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக கூடுதல் கவனம்:
மற்ற கட்சிகளை காட்டிலும் தெலங்கானா தேர்தலில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. காரணம் தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. இதனால், தென்னிந்தியாவில் பாஜகவின் பிடி தளர்ந்துள்ளது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகவே அமித் ஷாவை தொடர்ந்து, அண்மையில் பிரதமர் மோடி கூட தெலங்கானாவில் பரப்புரையில் ஈடுபட்டார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் மகளிருக்கு உரிமைத் தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது.