உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது உன்னாவ் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஆக்ரா நகரின் அருகே அமைந்துள்ளது பங்கார்மாவ் பகுதி. இந்த சூழலில், பீகாரின் சீதார்மஹியில் இருந்து காலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.


கோர விபத்து:


பீகாரில் இருந்து டெல்லி நோக்கி அந்த தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே பால் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை 5.15 மணியளவில் தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில், பேருந்தும் – லாரியும் மிகவும் மோசமாக சேதமடைந்தன.






18 பேர் உயிரிழப்பு:


இந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 19 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவம் அறிந்த அந்த மாநில போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பங்கர்மாவ்வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.


உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்ரா அருகே காலையில ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தின் ஒரு புறம் முற்றிலும் சிதைந்துள்ளது. பேருந்தின் ஒரு பாதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்திற்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.