இந்திய ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இளைஞர்களும், மாணவர்களும் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


பீகாரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் ரயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அவர்கள் ரயில்நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதால் ரயில்சேவை மூன்று மணிநேரம் பாதிக்கப்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற ரயில்வே போலீசார் மீது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த மூன்று ரயில்களையும் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் போலீசார் உள்பட பலரும் காயமடைந்தனர்.


காலை முதல் ரயில்நிலையத்திற்குள் புகுந்த போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார். இதுவரை சுமார் 15 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




வன்முறைக் களமாக மாறியுள்ள செகந்திரபாத் ரயில்நிலையத்தில் கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ், ராஜ்கோட் எக்ஸ்பிரஸ், அஜந்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் போராட்டக்காரர்களினால் தீக்கிரையாகியது. இந்த போராட்டத்தினால் 71 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பீகாரில் போராட்டக்காரர்கள் ரயில்களை கொளுத்தியதில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது. அக்னிபத் திட்டத்தால் முக்கிய நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா, மேற்குவங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண