அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படைக்கான அக்னி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 


அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி


அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 


இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  


இதற்கிடையே விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின்கீழ் ஜூன்24ஆம் தேதி தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அண்மையில் அறிவித்தார். 


இந்நிலையில் விமானப் படை அக்னி வீரர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 24ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். 


இவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


முழுமையான விவரங்களுக்கு: https://careerindianairforce.cdac.in/assets/joining_instructions/AGNIVEER_VAYU.pdf


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண