நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. முதல் நாளான 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து இரு அவைகளிலும் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தற்போது வரை நடந்து வருகிறது. 


இந்தநிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிரதமர் மோடி, நேற்று தனியாக 8 எம்.பிகளை அழைத்து  மதிய உணவுடன் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இந்த 8 எம்.பிக்களில் பாஜக மட்டும் இல்லாமல் மற்ற கட்சிகளை சார்ந்த எம்.பிகளுக்கும் கலந்து கொண்டனர். 


நாடாளுமன்ற கேண்டீனில் மதிய உணவுக்கு தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 8 எம்.பிக்கள் பிரதமருடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்பின்போது, என்ன விஷயத்திற்காக தங்களை அழைத்தீர்கள் என்று எம்.பிக்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் இன்று உங்களைத் தண்டிக்கப் போகிறேன், என்னுடன் வாருங்கள்” என்று பிரதமர் எம்.பி.க்களிடம் விளையாட்டாக  கூறியுள்ளார். 


பிரதமர் மோடியின் உடனான மதிய உணவுக்கு பின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற கேண்டீனில் பிரதமர் மோடியுடன் அமர்ந்திருந்த எட்டு எம்.பிக்களுக்கு அரிசி, கிச்சடி, பனீர், பருப்பு, ராகி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் எங்களுக்கான பில்லை பிரதமர் மோடியே செலுத்தினார். 






பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலம், தென் மாநிலங்கள் உள்பட எந்தவொரு கட்சி பாகுபாடும் பார்க்காமல் 8 எம்.பிக்களை அழைத்து எங்களுடன் நாடாளுமன்றத்தில் உள்ள கேண்டீனில் மதிய உணவு உட்கொண்டார். இது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. இந்த மதிய உணவின்போது பாஜக எம்.பிக்கள் மட்டுமல்ல, பிற கட்சிகளை சார்ந்த எம்பிக்களும் கலந்து கொண்டார். மதிய உணவின்போது பிரதமர் மோடி, அவரது தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி எங்களிடம் பேசினார். 


45 நிமிடங்கள் எங்களிடம் பிரதமர் மோடி பேசியது, புதிய உத்வேகத்தை கொடுத்தது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். மேலும், ”பிரதமர் மோடி தினமும் வெறும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குவதாகவும், மாலை 6 மணிக்கு மேல் எந்தவிரு உணவையும் எடுத்து கொள்வது இல்லை என்று எங்களிடம் தெரிவித்தார்” என கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


பிரதமர் மோடியுடன் உணவருந்திய எம்.பிக்கள் யார் யார்..? 


தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராம் மோகன் நாயுடு, பிஎஸ்பி சார்பில் ரித்தேஷ் பாண்டே, பாஜகவின் லடாக் எம்பி ஜம்யாங் நம்க்யால், மத்திய அமைச்சர் எல் முருகன், பிஜேடியின் சஸ்மித் பத்ரா, பாஜகவின் மகாராஷ்டிரா எம்பி ஹீனா காவித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.