சமீபத்தில், கேரளாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், பயணிகள் அமரும் இருக்கையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றாக அமர்வதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


 






இதையடுத்து, அந்த இருக்கை மூன்றாக பிளவுப்படுத்தப்பட்டு பேசுபொருளாக மாறியது. இச்சூழலில், இருக்கை பிளவுப்படுத்தப்பட்டாலும், அங்கு வந்த மாணவ, மாணவிகள் ஒருவர் மேல் ஒருவர் அமர்ந்து பழமைவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், ஸ்ரீகாரியத்தில் திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரி (சிஇடி) அருகே அமைந்துள்ள சர்ச்சையை ஏற்படுத்திய அந்த இருக்கையை உள்ளாட்சி அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று அகற்றியது. முன்னதாக, அதே இடத்தில் பாலின வேறுபாடு இல்லாத பேருந்து நிலையம் கட்டப்படும் என திருவனந்தபுரம் மேயர் ஆர்யா எஸ். ராஜேந்திரன் உறுதியளித்திருந்தார். 


இதனிடையே, அவர் உறுதி அளித்த இரண்டே மாதங்களில் நகராட்சி அலுவலர்கள் அதை அகற்றியுள்ளனர். பின்னர், ஒரு பதிவில், இருக்கையை மூன்றாக பிளவுப்படுத்திய விதம் நியாயமற்றது மட்டுமல்ல, கேரளாவைப் போன்ற முற்போக்கு சமூகத்திற்கு பொருத்தமற்றது என்றும் மேயர் கூறியிருந்தார்.


மேலும், மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்றாக உட்காருவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தார்மீக கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் பழங்காலத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.


பேருந்து நிலையத்தில் உள்ள பெஞ்சை உடைப்பதை ஏற்க முடியாது என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணியான டிஒய்எஃப்ஐ கூறியுள்ளது.


பொதுவாக இருபாலர் பயிலும் பள்ளி, கல்லூரிகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம். வகுப்பறையில் பேசக் கூடாது, பள்ளி வளாகங்களில் ஒன்றாக சுற்றக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இன்றளவும் அமலில் உள்ளது.


மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுவாகவே இளைய சமுதாயம் மத்தியில் எதிர்ப்பு தான் உள்ளது. 


மாணவ, மாணவிகள் ஒன்றாக அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர்வாசிகளுக்கு பதில் அளித்து பேசிய அக்கல்லூரி மாணவிகள் சங்கத்தின் பிரதிநிதி அங்கிதா ஜெசி, கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு சங்கங்களால் தான் இத்தகைய சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என கூறியிருந்தார்.


மேலும் போக்குவரத்து போன்ற பல காரணங்களுக்காக மாணவர்கள் அங்கு காத்திருப்பதைக் கண்டு பல நேரம் குடியிருப்பு வாசிகள் காவல்துறையை அழைத்துள்ளனர்  எனவும் அவர் தெரிவித்திருந்தார்.