ஜோஷிமத்திற்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலம் சாமோலி பகுதியில் உள்ள கர்ணபிரயாக்கில் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த விரிசல்கள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. அருகில் உள்ள 28 வீடுகள் வரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை, பேரிடர் மேலாண்மை அதிகாரி என்.கே. ஜோஷி, எம்எல்ஏ அனில் நௌதியால், சாமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷு குரானா, கர்ணபிரயாக் எஸ்டிஎம் ஹிமான்ஷு கஃபல்டியா மற்றும் பகுகுணா நகர், சுபாஷ் நகர், அப்பர் பஜார் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.பகுகுணா நகர் வீட்டுச் சுவர்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ந்து போனர்.
தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், விரிசல்களைக் கண்காணிக்கவும் சேதமடைந்த கட்டிடங்களில் கிராக்மீட்டர்களை நிறுவவும் மாஜிஸ்திரேட் ஹிமான்ஷு குரானா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நகரின் இந்த பகுதியில், கடந்த ஆண்டு மழைக்காலங்களில் நிலம் சரிவு ஏற்பட்டது. பேரிடர் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
குரானாவின் கூற்றுப்படி, விரிசல்கள் ஏற்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள். வீடுகளை வாடகைக்கு எடுக்க விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு மாதாந்திர கட்டணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் ஜோஷிமத், புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கவர்ச்சிகரமான சுற்றுலா நகரம் தற்போது நிலச்சரிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் பல கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜோஷிமத் போலவே, ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் புதைந்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளிலும் மசூதி ஒன்றிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமான மண் பெயர்வு ஏற்படுவதற்கான காரணத்தை அறிய நிபுணர்கள் கிராமத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தோடா காவல்துறை துணை ஆணையர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், "மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படக்கூடாது" என்றார்.
முன்னதாக, ஜோஷிமத் நகரம் 12 நாள்களில் 5.4 செ.மீ அளவுக்கு மண்ணில் புதைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டிருந்தது. இஸ்ரேவின் தேசிய தொலையுணர்வு மையம் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தில், டிசம்பர் 27 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ மண்ணில் புதைந்தது தெரிய வந்தது.
இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்தாண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு தற்போது நிலத்தில் மண் புதைந்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மத்திய ஜோஷிமத் நகரில் ராணுவ ஹெலிபேட் மற்றும் கோயில் அமைந்துள்ள பகுதியில் திடீரென மண் பெயர்ந்தது.