இரண்டு வாரங்களுக்கு முன்பு, குஜராத்தில் ஆட்டோ டிரைவர் விக்ரம் தண்டனி என்பவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார். சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள் என அனைத்திலும் இது செய்தியாக வெளியாகி இருந்தது.
இந்நிலையில், யு டர்ன் அடித்துள்ள அந்த ஆட்டோ டிரைவர், தான் பிரதமர் மோடியின் விசிறி என்றும் பாஜகவின் தீவிரமான ஆதரவாளர் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோடி கலந்து கொண்ட பேரணியில், பாஜகவின் காவி துண்டு மற்றும் தொப்பியை அணிந்து காணப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியபோது, செப்டம்பர் 13 ஆம் தேதி அகமதாபாத்தில் ஆட்டோரிக்ஷா தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதால், கெஜ்ரிவாலை தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்ற உணவருந்தினார். இச்சம்பவம் குறித்து விவரித்த அவர், "நான் கெஜ்ரிவாலை இரவு உணவிற்கு அழைத்தேன். ஏனென்றால் எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
எனது வீட்டில் அவருக்கு விருந்து அளிக்க நான் முன்வந்தவுடன், கெஜ்ரிவால் அதை ஏற்றுக்கொண்டார். இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று எனக்குத் தெரியாது. மற்றபடி, அக்கட்சியுடன் (ஆம் ஆத்மி) தொடர்பில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த ஆம் ஆத்மி தலைவருடனும் நான் தொடர்பில் இல்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், தான் பிரதமரின் பெரிய அபிமானி என்றும் எப்போதும் பாஜகவுக்கு வாக்களித்து வருவதாகவும் குறிப்பிட்டார். "நான் மோடிஜியின் தீவிர ரசிகன் என்பதால்தான் (பேரணிக்காக) இங்கு வந்தேன். நான் ஆரம்பம் முதலே பாஜகவில் இருந்து வருகிறேன். கடந்த காலங்களில் எப்போதும் என் வாக்கை பாஜகவுக்கே செலுத்தி உள்ளேன். இதை நான் எந்த அழுத்தத்திலும் கூறவில்லை.
குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று, ஆட்டோ டிரைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அக்கூட்டத்தில்தான், தன் வீட்டிற்கு வந்து சாப்பிடுமாறு ஆட்டோ டிரைவர் கெஜ்ரிவாலை கேட்டு கொண்டார்.