பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை எம்பி சுப்ரமணியன் சுவாமி. இவருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக z-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சுப்ரமணியன் சுவாமி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது 2016ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பங்களாவை அவர் காலி செய்ய அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


 


இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “பல கட்சிக்காரர்கள் என்னிடம் நீங்கள் மோடிக்கு எதிராக செல்வீர்களாக என்று கேட்டு வருகின்றனர். ஹரேன் பாண்ட்யாவின் வழக்கை வைத்து பார்க்கும் போது எனக்கு அவர் நிலை வர இன்னும் இரண்டு நிலைகள் உள்ளன. பாண்ட்யா இருந்த சூழலை பயன்படுத்தி அவரை சிலர் கொலை செய்தனர். ஆகவே இதுபோன்ற நிலைகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக என்னுடைய நண்பர்களுடன் பேசி வருகிறேன் ” எனப் பதிவிட்டுள்ளார். 


 






ஹரேன் பாண்ட்யா:


குஜராத் மாநிலத்தில் இருந்த பாஜக தலைவர்களில் ஒருவர் ஹரேன் பாண்ட்யா. இவர் குஜராத் அரசியலில் மிகவும் பலம் வாய்ந்த தலைவராக இருந்தார். குறிப்பாக 2001ஆம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக மோடி பதவியேற்ற பிறகு அவர் தேர்தலில் போட்டியிட ஹரேன் பாண்ட்யாவின் தொகுதி தேர்வு செய்யப்பட்டது. எனினும் அந்தத் தொகுதியை ஹரேன் பாண்ட்யா மோடிக்கு விட்டு கொடுக்க மறுத்தார். அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக ஹரேன் பாண்ட்யா சில விஷயங்களை விசாரணை ஆணையத்திற்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அதன்பின்னர் அவருக்கு அகமதாபாத் எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதி மறுக்கப்பட்டது. இதன்காரணமாக 15 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக வென்று வந்த தொகுதியிலிருந்து ஹரேன் பாண்ட்யாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்ட்யாவை சில அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 12 பேரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர். 


சுப்ரமணியன் சுவாமி வழக்கு:


சுப்ரமணியன் சுவாமி மாநிலங்களவை எம்பியாக இருந்த போது 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் அரசு பங்களா ஒன்று ஒதுக்கப்பட்டது. அந்த பங்களாவை அவருக்கு 5 ஆண்டுகள் அரசு ஒதுக்கியிருந்தது. இந்த பங்களாவை அவர் தற்போது காலி செய்ய வேண்டும் என்று அரசு கோரியிருந்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.


அதில் தனக்கு z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால் பாதுகாப்பாளர்களும் தங்கும்படி இருக்கும் வசதி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் இங்கே வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில், சுப்ரமணியன் சுவாமியின் பாதுகாப்பிற்கு இருந்த அச்சுறுத்தல் காரணமாகவே இந்த பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. z பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் நபர்களுக்கு பங்களா ஒதுக்கப்படவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அரசு பங்களாவை அடுத்த 6 வாரங்களுக்குள் சுப்ரமணியன் சுவாமி காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.