கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் கனிச்சார் கிராமத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த தொற்று நோய் பரவியதையடுத்து, மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளை அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பன்றிகளை அழிக்க உத்தரவு
மலையம்பாடியில் உள்ள தனியார் பன்றி பண்ணையில் வெள்ளிக்கிழமை இந்த காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்டது. இதனால், அந்த குறிப்பிட்ட பண்ணையிலும், 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மற்றொரு பண்ணையிலும் உள்ள பன்றிகளை அழிக்க மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பன்றிப் பண்ணையில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவு வரை நோய்த்தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகள் நோய் கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் பிடிஐயிடம் தெரிவித்தன.
பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை
இப்பகுதியில் மூன்று மாதங்களுக்கு பன்றி இறைச்சி கொண்டு செல்லவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் இறந்த பன்றிகளின் சடலங்களை முறைப்படி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து உடனடி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, உள்ளூர் அதிகாரிகளிடம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பண்ணையில்?உள்ள பன்றிகள் கடந்த 2 மாதங்களுக்குள் வேறு பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்களை மாவட்ட நிர்வாகம் கேட்டறிந்தது.
பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள்
குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்தில் புதிதாக ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தால், பேரிடர் மேலாண்மை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க, குக்கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் அந்த கலெக்டர் உள்ளார் என்பதால் முழுமையாக அதன் பரவலை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டிலும் இதேபோல ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவியது. அப்போது வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய இரண்டு பகுதிகள் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலின் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டது. கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிற மாவட்ட அதிகாரிகள் நோய் பரவி வருவதால் பாதிக்கப்பட்ட பன்றிகளை அழிக்க உத்தரவிட்டனர். அதோடு இரு மாவட்டங்களிலும் உள்ள பன்றி பண்ணைகள் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. பண்ணைகளில் வேலை செய்பவர்கள் 24 மணிநேரமும் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.