Afghanistan embassy: இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்வதால், ஆப்கானிஸ்தான் தூதரகம் டெல்லியில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்:
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசிடம் இருந்து எதிர்கொண்டு வரும் சவால்களை குறைக்கும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி டெல்லியில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக எங்களுக்கு சாதகமான சூழல் உருவாகுன் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், டெல்லியில் உள்ள எங்களது தூதரகத்தை 23-11-2023 முதல் நிரந்தரமாக மூடும் முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு கொள்கை மற்றும் நலன்கள் சார்ந்த பரந்த மாற்றங்களின் விளைவாகும். இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் குடிமக்கள், எங்களது பணிக்காலத்தின் போது வழங்கிய புரிதல் மற்றும் ஆதரவிற்காக தூதரகம் தனது உண்மையான நன்றியைத் தெரிவிக்கிறது” என தெரிவித்துள்ளது.
இந்தியாவே இறுதி முடிவு எடுக்கும்?
ஆப்கானிஸ்தான் குடியரசைச் சேர்ந்த தூதர்கள் யாரும் தற்போது இந்தியாவில் இல்லை. தேசிய தலைநகர் டெல்லியில் பணியாற்றியவர்கள் பாதுகாப்பாக வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். "ஆப்கான் குடியரசின் தூதரக அதிகாரிகள் பணியை இந்திய அரசாங்கத்திடம் மட்டுமே ஒப்படைத்துள்ளனர். தூதரகத்தின் பணியின் தலைவிதியை முடிவு செய்வது, அதை மூடுவதைத் தொடர வேண்டுமா அல்லது மாற்று வழிகளைக் கருத்தில் கொள்வது, அதை ஒப்படைக்கும் சாத்தியம் உட்பட, அனைத்துமே தற்போது இந்திய அரசாங்கத்தின் முடிவில்தான் உள்ளது” எனவும் தாலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு வருவதில் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நாங்கள் கவனமாக பரிசீலித்தோம். கடந்த 22 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு அளித்த ஆதரவிற்கும் உதவிக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.
சரிந்த ஆப்கானிஸ்தான் சமூகம்:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதுமே, அங்கு மக்களாட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த அரசானது பெண் கல்வி உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள், மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், இங்கு ஆப்கானிய சமூகம் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது என்று அந்நாட்டு தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 2021 முதல் இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான புதிய விசாக்கள் வழங்கப்படுகின்றன.