கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். இருப்பினும், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மட்டுமே தலிபான் அரசை அங்கீகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்:


ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைத்த அரசாங்கத்தை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளன. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்கவும், எந்த நாட்டிற்கும் எதிராகவும் ஆப்கானிஸ்தான் மண்ணை  பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும் வலியுறுத்தி வருகிறது.

 

ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி பதவி வகித்தபோது, டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை தலைமை தாங்கி நடத்த ஃபரித் மாமுண்ட்சாய் நியமிக்கப்பட்டார். அவரின் அரசை தலிபான் கவிழ்த்த பிறகும், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக ஃபரித்தே தொடர்ந்து வந்தார்.

 

இச்சூழலில், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம், அதிகார போட்டி வெடித்தது. இந்தியாவுக்கான தூதர் பதவியில் இருந்து ஃபரித் நீக்கப்பட்டு, காதர் ஷாவை அந்த பதவியில் தலிபான்கள் நியமித்தனர். இதை தொடர்ந்து, இந்தியாவுக்கும் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான அரசுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வந்தது.

டெல்லியில் தூதரகத்தை மூடிய ஆப்கானிஸ்தான்:


இந்த நிலையில், இந்திய அரசால் போதுமான ஆதரவு வழங்கப்படவில்லை எனக் கூறி, டெல்லியில் உள்ள தூதரகத்தை ஆப்கானின்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. ஆப்கானிஸ்தான் நலன்களை பேணுவதில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் தூதரகத்தில் போதுமான மனித வளம் இல்லை என்றும் ஆப்கானிதான் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

 

இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆழ்ந்த சோகத்துடனும், வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது செயல்பாடுகளை நிறுத்தும் முடிவை அறிவித்துள்ளது. 

 

இந்திய அரசின் ஆதரவு இல்லாததாலும், காபூலில் சட்டப்பூர்வமாக செயல்படும் அரசாங்கம் இல்லாததாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் குடிமக்களின் நலன்களை பேணுவதில் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை ஒப்பு கொள்கிறோம்.
  

 

எதிர்பாராத சூழ்நிலைகள் தூதரகத்தின் பணியாளர்களையும் மனித வளங்களையும் கணிசமாகக் குறைத்துள்ளது. எனவே, தொடர்ந்து செயல்படுவது கடினமாகிறது. இந்த முடிவின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தான் அரசிடம் இருந்து ஆதரவும் அறிவுறுத்தல்களையும் சிலர் பெறலாம். 

 

ஆனால், எங்களுடைய தற்போதைய செயல்பாட்டிலிருந்து அவை வேறுபடலாம் என்பதையும் தூதரகம் தெரிவித்து கொள்கிறது. இந்த துணைத் தூதரகங்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் முறையான, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகாது. மாறாக சட்டத்திற்குப் புறம்பான ஆட்சியின் நலன்களுக்குச் சேவை செய்யும் எங்கள் உறுதியான நம்பிக்கை" என குறிப்பிடப்பட்டுள்ளது.