வரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை தளத்தில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏர் ஷோவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விமானப்படை தளத்தை சுற்றி இறைச்சி கடைகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரும் பிப்ரவரி 20ஆம் தேதி வரை, யெலஹங்கா விமானப்படை தளத்தை சுற்றி 10 கிமீ சுற்றளவில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் திறக்க கூடாது என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை, இறைச்சி, கோழி மற்றும் மீன்களை விற்க தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த தடை அவசியம். ஏனெனில், இறைச்சி பறவைகளை ஈர்க்கிறது. இது, சாகசத்தில் ஈடுபடும் விமானங்கள் பறவை தாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், விலங்குகளின் கழிவுகளை அறிவியல் முறையில் அகற்றும் பட்சத்தில், அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பெங்களூரு மாநகராட்சி, "அசைவ உணவுகளை உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஏரோ இந்தியா 2023 இன் பாதுகாப்பான நடத்தையை நோக்கி விமானநிலைய பகுதிக்கு அருகாமையில் பறவைகளின் செயல்பாட்டைத் தணிக்க கடுமையான கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
யெலஹங்கா விமானப்படை நிலையத்தின் 10 கிலோமீட்டர் சுற்றளவில் அசைவ உணவுகளை உட்கொள்வதற்கான கட்டுப்பாடுகள் குறித்து விமானப்படை அதிகாரிகளிடம் நிறைய புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன"
யெலஹங்கா விமானப்படை நிலையத்தைச் சுற்றி அசைவப் பொருட்களை உட்கொள்வதற்கு தடை விதிப்பதாக பெங்களூரு மாநகராட்சி முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், குடியிருப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மாநகராட்சி தடையை திரும்ப பெற்றது. கழிவுகளை அகற்றுவதில் கவனம் செலுத்தும்படி அவர்களை வலியுறுத்தியது.
ஏரோ இந்தியா 2023 குறித்து பேசியுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "அதிகம் பேர் பங்கேற்கும் மிகப்பெரிய ஏர்ஷோவாக இது இருக்கும். பிரதிநிதிகள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பு இருக்கும்" என்றார்.