ஒடிஷா ரயில் விபத்தில் பல அடி தூரத்துக்கு ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொல்கத்தா மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ற கோரமண்டல் விரைவு ரயில் நேற்று மாலை 7 மணியளவில் ஒடிஷா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சில பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு வழித்தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் மீது விழுந்தது.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வழித்தடத்தில் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. 3 ரயில்கள் மீது மோதிய விபத்தில் பயணிகள் ரயில்களின் மொத்தம் 16 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 230க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் அதிகமானோர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட உள்ளனர். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், ரயில்வே அமைச்சகம் நிதியுதவி அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசும் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் விவகாரத்தில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. ஒடிஷாவிற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர். விபத்தில் சிக்கிய ரயிலில் சிக்கிய பிற பயணிகளை மீட்க சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ரயில் விபத்தின் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பல அடி தூரத்திற்கு ரயில் பெட்டிகள் சீட்டு கட்டுப் போல இங்கும் அங்குமாக கவிழ்ந்து கிடக்கிறது. அங்கும் இங்குமாக மீட்பு படையினர் விரைந்து செல்கின்றனர். தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் இருந்து உடல்களை வெளியே எடுக்க கேஸ் கட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றது. ரயில் விபத்து தொடர்பான விசாரணை தென்கிழக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.