கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது. கடந்த 17 நாட்களாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்துகொண்டு இருந்த விண்கலம், தற்போது தனது முக்கிய இலக்கான லெக்ராஞ்சியன் 1 புள்ளியை நோக்கிய  தனது பயணத்தை தொடங்கியது. 


இப்படிப்பட்ட சூழலில், கடந்த 19ஆம் தேதி, அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம், பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி பயணம் செய்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 


9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி பயணித்து வரும் ஆதித்யா எல்1:


எக்ஸ் வலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்ட பதிவில், "9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி பயணம் செய்து வருவதன் மூலம் பூமியின் கோளத்தில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக வெளியேறியுள்ளது. சூரியன் - பூமி லெக்ராஞ்சியன் (L1) புள்ளியை நோக்கி, தற்போது விண்கலம் சென்று கொண்டிருக்கிறது.


 






தொடர்ந்து இரண்டாவது முறையாக பூமியின் மண்டலத்திற்கு வெளியே விண்கலத்தை அனுப்பியுள்ளது இஸ்ரோ. பூமியின் மண்டலத்திற்கு வெளியே இஸ்ரோ அனுப்பிய முதல் விண்கலம் மார்ஸ் ஆர்பிட்டர் ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


நோக்கம் என்ன?


சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தபிறகு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் மேற்கொள்ளும். 


இதனிடையே, ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் ரீதியான தரவுகளை ஏற்கனவே சேகரிக்கத் தொடங்கியுள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துகள்களை ஆய்வு செய்ய இந்த அறிவியல் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள STEPS எனும் கருவியில் பொறுத்தப்பட்டுள்ள 6 சென்சார்கள் மூலம் இந்த அறிவியல் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று இந்த STEPS கருவி சேகரித்த தரவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதிவெப்ப, ஆற்றல்மிகு அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்களை அளவீடு செய்து அறிவியல் தரவுகளை சேகரித்துள்ளது.