ஆதித்யா எல் 1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மேக்னோமீட்டர் பூம் கருவியை ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 


ஆதித்யா எல்1 விண்கலம்:


சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்தாண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது.


புவியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஆதித்யா எல்-1 விண்கலம்,  படிப்படியாக அடுத்தடுத்து இலக்கை நோக்கி உந்தி தள்ளப்பட்டன.  செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு  விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது. இதையடுத்து, பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் எல்1 புள்ளியை ஆதித்யா எல்1 விண்கலம் எட்டியது.


இந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மேக்னோமீட்டர் பூம் கருவியை ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


காந்த மண்டலங்களை ஆராய உதவும் 6 மீட்டர் மேக்னோமீட்டர் பூம் கருவியை கடந்த 132 நாள்களாக விண்கலம் ஏந்தி சென்றது. மேக்னோமீட்டர் பூமில் 2 ஃப்ளக்ஸ்கேட் மேக்னோமீட்டர்கள் கருவிகள் உள்ளன. விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலத்தை அளவிட இது உதவும்.


 







ஆராய்ச்சிப் பணிகள்:


ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதற்காக அந்த செயற்கைகோளில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. லெக்ராஞ்சியன் புள்ளியில் எந்த கிரகணமும் (சந்திர கிரகணம், சூரிய கிரகணம்) குறுக்கே வராத காரணத்தால், இடையூறு ஏதுமின்றி ஆய்வுப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.