Gautam Adani:  அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து,  டாலர் மதிப்பிலான பத்திர சலுகைகளை அதானி குழுமம் நிறுத்தியுள்ளது.


அதானி குழுமம் அறிவிப்பு:


அதானி குழுமம் சார்பில் மும்பை பங்குச் சந்தைக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் ஆகியவை எங்கள் வாரிய உறுப்பினர்களான கவுதம் அதானி மற்றும் சாகர் ஆகியோருக்கு எதிராக நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் முறையே ஒரு குற்றவியல் குற்றச்சாட்டை வெளியிட்டு ஒரு சிவில் புகாரை தாக்கல் செய்துள்ளன. இத்தகைய குற்றப் பத்திரிக்கையில் எமது குழு உறுப்பினர் வினீத் ஜெயினையும் யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் சேர்த்துள்ளது. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, எங்கள் துணை நிறுவனங்கள் தற்போது முன்மொழியப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திர விநியோகங்களை தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.



ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பத்திரங்கள்: 


கவுதம் அதானி மற்றும் இதர நிர்வாகிகள் சேர்ந்து 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான, லஞ்சத்தை இந்திய அதிகாரிகளுக்கு வழங்க முன்வந்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக ஆசிய வர்த்தகத்தில் அதானியின் அமெரிக்க டாலர் பத்திரங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. சில பத்திரங்கள் 15 சென்ட்கள் வரை சரிந்தன.இதன் விளைவாகவே, அதானி குழுமம் அதன் $600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பத்திர விநியோகத்தை ரத்து செய்துள்ளது. சட்ட முன்னேற்றங்களைக் காரணம் காட்டி, அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, குழு பத்திர விற்பனையை கைவிட்டது. அதிக மதிப்புள்ள சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு அதானி நிர்வாகிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் 20% வரை சரிந்தன, அதானி கிரீன் 18% மும்பை பங்குச் சந்தையில் (BSE) சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி பத்திரங்கள் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


குற்றச்சாட்டுகள் என்ன?


கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை  இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனம், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலமாக, பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் திரட்டியதாக  புகார் எழுந்துள்ளது. இது அமெரிக்க லஞ்ச ஒழிப்புச் சட்டமான, வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படுகிறது. நியூயார்க் நீதிமன்ற பதிவுகளின்படி, கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளார்.  அந்த வாரண்டுகளை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைக்க வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.