அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. 


ஹிண்டன்பர்க் அறிக்கை:


அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது. 


ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.


இந்திய முதலீட்டாளர்களுக்கு இழப்பு:


பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  


இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. 


நிபுணர் குழுவில் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தர், கே.வி.காமத், நந்தன் நிலகேனி, சோமசேகர் சுந்தரேசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செபி நடத்தும் விசாரணையின் அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. 


உச்ச நீதிமன்றம் அதிரடி:


இந்த பிரச்னைக்கு வழிவகுத்த காரண காரணிகளை ஆராய்ந்து, முதலீட்டாளர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிபுணர் குழு பரிந்துரைக்கும். அதேபோல, ஒழுங்குமுறை அமைப்பின் தோல்வி காரணமாக பிரச்னை நிகழ்ந்ததா என்பது குறித்தும் குழு ஆராய உள்ளது.


சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்காக தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் பாதுகாப்பான விதிகளையும் குழு பரிந்துரைக்கும்.


இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை அமைக்க தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசும் செபி அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக தெரிவித்திருந்தது.


ஆனால், நிபுணர் குழுவின் நோக்கம், அதன் உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை தாங்களே பரிந்துரை செய்ய அனுமதி வழங்க வேண்டும், அதன் விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்பிக்க  மத்திய அரசும் செபி அமைப்பும் அனுமதி கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.