மத்திய அமலாக்கத்துறை சார்பில்பாலிவுட் நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் பனாமா பேப்பர்ஸ் வழக்கில் விசாரணை செய்வதற்காக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் அவருடைய வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக அழைத்துள்ளதாகவும், அதற்காக அவர் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல கடந்த இரண்டு முறை நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் கால அவகாசம் கோரியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, மத்திய அமலாக்கத்துறை சார்பாக அன்னியச் செலாவணி விதிமீறல்களைக் குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று சுமார் 11.5 மில்லியன் ஆவணங்கள் `பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கசியவிடப்பட்டன. வெளிநாடுகளில் தங்கள் பணத்தைச் சுமார் 2,14,488 சொத்துகளில் முதலீடு செய்திருப்பவர்கள் குறித்த தகவல்கள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றன. அப்போது உலகின் நான்காவது பெரிய சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகாவில் இருந்து இந்தத் தகவல்கள் கசிந்தன. `ஜான் டோ’ என்ற பெயரைக் கொண்ட நபர் ஒருவர் இந்த ஆவணங்களை ஜெர்மனியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.
பனாமா நாட்டில் இருந்து வெளியிடப்பட்டதால், இதற்கு `பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. எனினும், பனாமா நாட்டு அரசு இந்தப் பெயர் பயன்பாடு தங்கள் நாட்டின் புகழைப் பாதிக்கும் என்று கூறியதால், சில் ஊடகங்கள் இதே விவகாரத்தை `மொசாக் பொன்சேகா பேப்பர்ஸ்’ என்று குறிப்பிட்டன.
பனாமா பேப்பர்ஸ் வெளிபடுத்திய ரகசியம் என்ன?
பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிநாடுகளில் பெரும் பணக்காரர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பணம் சேகரித்தது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 12 சர்வதேச தலைவர்கள், 143 அரசியல்வாதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் முதலானோர் வெளிநாடுகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட விசாரணைகளில், மொசாக் பொன்சேகா நிறுவனம் சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு, சர்வதேச அளவில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது முதலானவற்றைச் செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இடம்பெற்றோர் யார்?
இந்த ஆவணங்களில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சென்றடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய நெருங்கிய நண்பர் செர்கி ரோல்டுகின் என்பவர் ரஷ்ய வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வெளிநாடுகளில் முதலீடு செய்தது, புடினின் மகள் கேடரீனாவின் திருமணத்திற்காக வாங்கிய சறுக்கு விளையாட்டு ரிசார்டில் முதலீடு செய்தது முதலானவை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆவணங்களில் நடிகர் ஜாக்கி சான், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் நெருங்கிய உறவினர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிகர் ஜேகப் ஸூமாவின் உறவினர், மார்க் தாட்சர், கால்பந்து வீரர் மெஸ்ஸி, கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ், நடிகை எம்மா வாட்சன் முதலானோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
சுமார் 500 இந்தியர்களின் பெயர்களும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தன. நடிகர்கள் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன், ஐஷ்வர்யா ராய் பச்சன், பிவிஆர் சினிமாஸ் நிறுவனர் அஜய் பிஜ்லி முதலானோரின் பெயர்கள் `பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் இடம்பெற்றிருந்தன.