பாதிக்கப்பட்ட பெண்களை குறை கூறுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, அரசியல்வாதிகள் போகிற போக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றச்சாட்டு சுமத்திவிட்டு சென்று விடுகின்றனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எந்த விதமான பாதிப்பை அந்த பெண்கள் மீது இச்சமூகம் ஏற்படுத்துகிறது என்பது தெரிவதில்லை. அப்படி ஒரு சம்பவம்தான், கேரளாவில் தற்போது நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே, வெறுப்பு பேச்சை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி தலைவர் பி.சி. ஜார்ஜ், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த கருத்து தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண், அந்த வழக்கின் மூலம் தொழில் ரீதியாக பலன் அடைந்தார் என ஜார்ஜ் கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி 17 அன்று தனது காரில் கடத்தப்பட்டு 2 மணி நேரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரபல நடிகை குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். முதலில் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பாலியல் தாக்குதலை நடத்தி திலீப் திட்டமிட்டதாக பாதிக்கப்பட்ட நடிகை குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து திலீப்பும் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஜார்ஜ் மீதே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், வியாழன் அன்று கோட்டயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திலீப் வழக்கில் நடிகையை 'உயிர் பிழைத்தவர்' எனக் குறிப்பிடப்படுவதை கேலி செய்திருந்தார். செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "உயிர் பிழைத்தவருக்கு இப்போது பல படங்கள் வருகின்றன. பிரச்சினைக்குப் பிறகு அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.
சொல்லப்பட்ட சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணாக அவர் வாழ்க்கையில் அடைந்த இழப்பு மிகப்பெரியதாக இருக்கலாம். ஆனால், மற்ற துறைகளில் அவருக்கு பலன் கிடைத்தது என்பது என் நம்பிக்கை" என்றார்.
ஜார்ஜின் கருத்துகளை செய்தியாளர்கள் விமர்சித்த பிறகும், அவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த வழக்கில் திலீப் நிரபராதி என கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சொல்லி வருகிறார்.
2012 ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியை விட கொடூரமாக தாக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கும்போது, அந்த பெண் எப்படி அடுத்த நாளே வேலைக்கு சென்றிருக்க முடியும் என்றும் ஜார்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்த தேநீர் வழங்குவதாகக் கூறி முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களைத் தவிர்க்குமாறு ஒரு நிகழ்ச்சியில் ஜார்ஜ் பேசியிருந்தார். இதையடுத்து, பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காக ஜார்ஜ் மீது மே மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்