கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 
ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் 10 நாட்களில்  சுமார் 500 கோடிகளை உலகம் முழுவதும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


ஆன்மீக பயணத்தில் இறங்கிய ரஜினிகாந்த்:


ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு முன் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் கிளம்பிய  நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் எனப் பயணித்து வருகிறார்.


உத்தரகாண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் என வரிசையாக பாஜக பிரமுகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த், நேற்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார். தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பார் எனக் கூறப்பட்டது. 


ஆதித்யநாத் காலில் சாஸ்டாங்கமாக விழுந்த ரஜினி:


அதன்படி, நேற்று யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 51 வயதே ஆன ஆதித்யநாத் காலில் 72 வயதான ரஜினிகாந்த் விழுந்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசியுள்ளார். பின்னர், அகிலேஷ் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "நான் அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு விழாவில் சந்தித்தேன்.


அகிலேஷை சந்தித்த பிறகு அயோத்திக்கு செல்லும் சூப்பர் ஸ்டார்:


அன்றிலிருந்து நாங்கள் நண்பர்கள். நாங்கள் தொலைபேசியில் பேசி இருக்கிறோம். 5 வருடங்களுக்கு முன்பு இங்கு படப்பிடிப்பிற்காக வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை. இப்போது, அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரை சந்தித்தேன்" என்றார். இதை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.


கடந்த வாரம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று துறவிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், பின்னர் உத்தரகாண்டில் இருக்கும் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார்.


தொடர்ந்து துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்ட ரஜினிகாந்த், கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. ரஜினி நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.