பாலிவுட் நடிகர்கள் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கிவரும் காலம் இது. அண்மையில் நடிகர் ஷாருக்கான் மகனும் நடிகருமான ஆர்யன் கான் மும்பை சொகுசுக் கப்பல் போதைப்பொருள் வழக்கில் சிக்கியது பெரும் சர்ச்சையானது. அந்த வரிசையில் பணமோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் விவகாரத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர்கள் நோரா ஃபத்தேஹி மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.நோரா ஃபத்தேஹி இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக வாக்குமூலம் அளித்த நிலையில் நடிகை ஜாக்குலின் நாளை ஆஜராவார் எனத் தெரிகிறது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்ததை அடுத்து இருவரும் வாக்குமூலம் கொடுக்க முன்வந்துள்ளனர். 




நடிகர் ஜாக்குலின் கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஒருமுறை அமலாக்கத்துறையில் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ரூ.200 கோடி வரை பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறை கூறியிருந்தது. முன்னதாக, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரகேகர் தொடர்பான விசாரணை இந்தியா முழுவதுமே நடைபெற்று வருகிறது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒரு மோசடியை செய்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர். சுகேஷ் சந்திரசேகர் மீது மத்திய பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு  அமலாக்கத்துறை ஆகியவற்றில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 2013-ம் ஆண்டு போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது உள்ளிட்ட பல  புகார் நிலுவையில் உள்ளன. சுகேஷ் தொடர்பான மோசடி வழக்கில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை  ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்க இயக்குநரகத்தால் ஆகஸ்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 5 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஜாக்குலின் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல. சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் சாட்சியாக அவர் விசாரிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சுகேஷ் இரட்டை இலை சின்னம் மூலமே பார்வைக்கு வந்தார். அதிமுக பிளவுபட்டதின் எதிரொலியாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இரு பிரிவினருக்கிடையே அதிமுகவின் சின்னத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்தசுகேஷ் சந்திரசேகரிடம் டிடிவி தினகரன்  அணியினர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தினகரனோ, சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார்.மேலும், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜரானார் தினகரன். அவரிடம் 4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீசாரால் தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தினகரன் ஜாமீனில் விடுதலையானார்.


சமீபத்தில், திகார் சிறையிலிருக்கும் சுகேஷ்சந்திரசேகரின் பண்ணை வீடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானாத்தூரில் உள்ளது. இந்த வீட்டில்  ஐந்து நாட்களாக  அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 16 சொகுசு கார்கள், லேப்டாப்கள், 85 லட்சம் பணம், தங்க கட்டிகள்  உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



மேலும் பண்ணை வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.